90-களில் முன்னணி நடிகையாக இருந்தவர் சுகன்யா. புது நெல்லு புது நாத்து என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். ஆர்த்தி தேவியாக இருந்த இவரை சுகன்யாவாக மாற்றியவர் இயக்குனர் பாரதிராஜா தான். பின்னர், சின்ன கவுண்டர், கோட்டைவாசல், மகாநதி, மிஸ்டர் மெட்ராஸ் என நிறைய வெற்றிப் படங்களில் நடித்தார். அதோடு பொதிகை தொலைக்காட்சியில் பெப்ஸி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல், சன் டிவி-யில் ஆனந்தம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்துள்ளார். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை 2002-ல் ஸ்ரீதர் ராஜகோபாலன் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட சுகன்யா, வெகு விரைவில் அதாவது 2003-ல் கணவரை பிரிந்து விவாகரத்து பெற்றார்.



அவர் ஒரு தனியார் யூட்யூப் சானாலுக்கு பேட்டி அளித்தபோது, அவர் தன்னோடு நடித்த நடிகர்கள் குறித்து நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது நடிகர் மற்றும் டான்ஸ் மாஸ்டர் பிரபுதேவா உடன் நடனம் ஆடிய அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டார். அவர் பேசுகையில், "சின்ன ராசாவே பாடலில் பிரபு தேவாவுடன் நடனம் ஆடியது ஒரு மிகச்சிறந்த அனுபவம். எல்லோரும் நினைப்பாங்க ரொம்ப கஷ்டமா இருக்கும் அவரோட ஸ்டெப்ஸ ஃபாலோ பண்றது அப்படின்னு. ஆனா ரொம்ப சிம்பிளா வேலை வாங்க கூடியவர் பிரபு தேவா. ஏற்கனவே சத்யராஜ் சாரோடு தான் நடித்த திருமதி பழனிசாமி திரைப்படத்தில் குத்தால குயிலே பாடலுக்கு சத்யராஜ் சாருடன் நடனம் ஆடியபோது அந்த பாடலுக்கு பிரபுதேவாதான் கோரியோ பண்ணார். அதனால புதுசா தெரியல, ரொம்ப ஈஸியாதான் இருந்துது. அப்படி பட்ட கலைஞரிடம் வேலை செய்துள்ளோம் என்பது இப்போதும் எனக்கு பெருமை." என்று கூறிய அவரிடம் மேலும் பல கேள்விகள் கேட்க பட்டன. அதில் இந்தியன் 2 திரைப்படத்திலும் நீங்கள் இருக்கிறீர்களா என்று கேட்டபோது வணக்கம் மட்டும் வைத்து விலகிக்கொண்டார். 



சின்ன கவுண்டர் திரைப்படம் குறித்து பேசுகையில், "சின்ன கவுண்டர் திரைப்படம் நான் நிறைய கற்றுக்கொண்ட திரைப்படம். அதில் நடித்தவர்கள் அனைவரும் பெரும் கலைஞர்கள். விஜயகாந்த் சார் அவ்வளவு தன்மையான மனிதர். மனோரமா அம்மா எப்பேர்ப்பட்ட ஆர்ட்டிஸ்ட், ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்தவர் கொஞ்சம் கூட அலட்டிக்கொண்டதே இல்லை. அவரோடு எனக்கு இருந்த முதல் காம்பினேஷன் ஸீன் எடுக்கும்போது முதல் நாள் படப்பிடிப்பு, அன்று அவரது கார் வர தாமதம் ஆகியது, நல்ல நேரம் போய் விட கூடாது என்பதால், என் டயலாக்ஸ் மட்டும் தனியாக எடுத்து படப்பிடிப்பை தொடங்கினார்கள். அதுதான் நானும் அவரும் சண்டை போடும் காட்சி. கவுண்டமணி சாரும் செந்தில் சாரும் ஸ்பாட்டிற்கு வந்தாலே சிரிப்பு சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். அங்கு கூடி இருக்கும் மக்கள் அவர்களுடைய ஏதோ ஒரு காமெடியை சொல்லி சொல்லி சிரித்து கொண்டு இருப்பார்கள். கவுண்டமணி சார் செந்திலை படங்களில் தான் திட்டுவார், நேர்ல எல்லோரிடமும் மிகவும் அன்பாக பழகக்கூடிய நபர் அவர். மிகவும் மரியாதையானவர், அதற்கு முன்னதாகவே அவருடன் ஞானப்பழம் என்ற பாக்யராஜ் திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருப்பேன். அப்போதிலிருந்தே நல்ல நட்பு எங்களுக்குள் உண்டு." என்று கூறினார்.