நடிகை தீபிகா படுகோனேவை பதான் திரைப்படம் தொடர்பாக பலரும் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் மீண்டும் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். 


உலகக்கோப்பையை அறிமுகப்படுத்திய தீபிகா படுகோனே:


கத்தாரில் நடைபெற்ற  உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் வெல்லும் அணிக்கு வழங்குவதற்கான கோப்பையை, இந்திய நடிகை தீபிகா படுகோனே மற்றும் ஸ்பெயின் அணியின் முன்னாள் கோல் கீப்பர் ஐகர் கேசிலாஸ் ஆகியோர் சேர்ந்து நேற்று மைதானத்திற்கு கொண்டு வந்தனர். இந்தியர் ஒருவர் ஃபிபா உலகக்கோப்பையை மைதானத்தில் அறிமுகப்படுத்துவது இதுவே முதல் முறையகும். 


தீபிகா பெருமிதம்:


இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் தீபிகா படுகோனே வெளியிட்ட பதிவில், ஃபிபா உலகக்கோப்பையை அறிமுகப்படுத்தியதோடு, விளையாட்டு உலக வரலாற்றில் சிறப்பான ஒரு ஆட்டத்தை பார்த்தேன், இதைவிட வேறு என்ன கேட்க முடியும் என மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.






பிரகாஷ் ராஜ்: 


இந்நிலையில், தீபிகா படுகோனே உலகக்கோப்பையுடன் இருக்கும் புகைப்படத்தை குறிப்பிட்டு, நடிகர் பிரகாஷ் ராஜ் டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தீபிகா படுகோனேவை நினைத்து பெருமைப்படுவதாகவும்,  'பேஷரம் ரங்' பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்த மதவெறியார்கள் தற்போது உலகக்கோப்பையை புறக்கணிப்பார்களா என கேட்க தோன்றுவதாகவும் பிரகாஷ் ராஜ் வினவியுள்ளார்.


 


பதான் திரைப்பட பாடல்:


பாலிவுட் ஸ்டார் நடிகர் ஷாருக்கான், தீபிகா படுகோன் நடிப்பில் வெளியாக தயாராக இருக்கும் திரைப்படம் 'பதான்'. யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படம் இந்தி மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு மொழிகளிலும் உருவாகியுள்ளது. சித்தார்த் ஆனந்த் இந்தப் படத்தை இயக்கியுள்ள நிலையில், 2023 ஜனவரி, 25ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இப்படம் குறித்த எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடையே எகிறியுள்ள நிலையில், இப்படத்தில் இருந்து 'பேஷரம் ரங்' எனும் பாடல் அண்மையில் வெளியாகி, ரசிகட்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது.


சர்ச்சையில் சிக்கிய பதான் பட பாடல் :


பதான் படத்தில் 'பேஷரம் ரங்' பாடலில் தீபிகா படுகோன் கவர்ச்சியின் உச்சத்தில் தோற்றமளித்ததால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். பதான் படத்தின் இந்த பாடலில் ஷாருக்கான் - தீபிகா படுகோன் இருவருக்கும் இடையில் கெமிஸ்ட்ரி அமர்க்களமாக இருந்ததை ரசிகர்கள் பாராட்டினார்கள். ஆனால் , இந்த பாடலில் காவி மற்றும் பச்சை நிறத்திலான ஆடைகள் பயன்படுத்தப்பட்டதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த படத்தில் சில தவறான மன நிலையை ஏற்படுத்த கூடிய வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது என்பதால் அவை மாற்றப்பட வேண்டும் அல்லது நீக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையெனில், அப்படத்தை மத்திய பிரதேசத்தில்  வெளியிட முடியாது என, அம்மாநில உள்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார்.  ஷாருக்கான் மற்றும் தீபிகா மீது தனிமனித தாக்குதல்களும் நடத்தப்படும் நிலையில்,  பதான் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன. இந்நிலையில் தான், தீபிகா படுகோனேவிற்கு ஆதரவாக பிரகாஷ் ராஜ் பேசியுள்ளார்.