காவல்துறையை கேள்வி கேட்பது போல படங்களை எடுப்பதும், தயாரிப்பதும் ஏன் என்பதற்கு இயக்குநர் வெற்றிமாறன் பதில் அளித்துள்ளார்.
இது குறித்து வெற்றிமாறன் கூறும் போது, “ காவல்துறையை குறிப்பாக சொல்ல வேண்டும் என்று இல்லை. அவர்கள் இங்கு இருக்கும் அமைப்பின் முகம். எப்போது நாம் அமைப்பின் செயல்பாடு குறித்து பேசுகிறோமோ. அவர்களை பற்றி நாம் பேசாமல் இருக்க முடியாது. மக்கள் மீது அமைப்பின் ரீதியாக நடத்தப்படும் ஒடுக்கு முறைகள் அதிகம் காவல்துறையினராலே நடத்தப்படுகிறது. அதனால்தான் அதில் எனக்கு அதிக கவனம் இருக்கிறது” என்றார்.
தகவல் உதவி: கலாட்டா ப்ளஸ்
தனுஷ் நடித்த ‘பொல்லாதவன்’ திரைப்படம் மூலமாக, தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் வெற்றிமாறன். இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், மீண்டும் தனுஷை வைத்து, ஆடுகளம் படத்தை வெற்றிமாறன் இயக்கினார். இந்தப்படத்திற்கு தேசிய விருதுகள் உட்பட பல விருதுகள் கிடைத்தன.
அதனைத்தொடர்ந்து, விசாரணை படத்தை எடுத்தார். செய்யாத குற்றத்திற்காக, சாமானிய மக்கள் எப்படி போலீசாரால் ஒடுக்கப்படுகிறார்கள் என்பதை இரத்தமும், சதையுமாக இந்தப்படத்தில் அவர் சொல்லியிருந்தார். இந்தப்படம் சமூகத்தில் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன் பின்னர் வடசென்னை, அசுரன் என அடுத்தடுத்த வெற்றிகளை கொடுத்த வெற்றிமாறன் மேடைகளிலும், அரசியல் சார்ந்த தனது கருத்துக்களை முன்வைத்து வருகிறார்.
இவர் பல படங்களை தயாரித்திருந்தாலும், ‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தை வாங்கி வெளியிட்டது கவனத்தை ஈர்த்தது. அந்தப்படமும் காவல்துறையின் ஒடுக்குமுறையை பற்றி பேசியிருந்தது. அடுத்ததாக விஜய்சேதுபதி, சூரி நடிப்பில் உருவாகி வரும் ‘விடுதலை’ படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார். இந்தப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கிறது. இதற்கு அடுத்ததாக, சூர்யாவின் ‘வாடிவாசல்’ வடசென்னை 2 உள்ளிட்ட பல படங்கள் வெற்றிமாறனின் கைவசம் இருக்கிறது.