பிரேமம் மலர் டீச்சர். இந்தப் பெயருக்கு அப்புறம் தான் சாய் பல்லவி என்ற பெயரே நம் மனதிற்கு நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அல்ஃபோன்ஸ் புத்திரன் நம்மை அந்தக் கதாபாத்திரத்தில் கட்டிப்போட்டிருப்பார்.


அவரது கன்னத்தில் உள்ள பருக்கள் தான் அத்தனை அழகுக்கும் காரணம் என்று சொல்லும் அளவுக்கு கறை நல்லது என்பது போல் பரு நல்லது என்றும் டீன் ஏஜ் பிள்ளைகள் தங்களின் தோற்றத்தை ஏற்றுக் கொள்ளக் காரணமாக இருந்தவர் சாய் பல்லவி.


சாய் பல்லவி, ஃபேர்னஸ் க்ரீம் விளம்பரம் ஒன்றில் நடிக்க அவருக்கு ரூ.2 கோடி வரை சம்பளம் பேசப்பட்டதாம். ஆனாலும் கூட அவர் அந்த விளம்பரத்தைப் புறக்கணித்திருந்தார். அதற்கான காரணத்தையும் அவர் கூறியிருந்தார். எனக்கு ஒரு தங்கை உண்டு. பெயர் பூஜா. அவருக்கும் எனக்கும் ஐந்து வயது வித்தியாசம். அவரும் இப்போது சினிமாவில் நடிக்கிறார். ஆனால் சிறு வயதில் அவருக்கு ஒரு காம்ப்ளக்ஸ் இருந்தது. என்னைவிட அவர் சற்று நிறம் குறைவாக இருப்பதாக அவர் கருதினார். அதனால் வருத்தப்படுவார். அப்போது ஒருமுறை அவரிடம் நான் விளையாட்டாக நீ நிறைய காய்கறி, பழங்கள் சாப்பிடு நீயும் என் நிறத்துக்கு வருவாய் என்று கூறினேன். அப்போதெல்லாம் அவருக்கு காய், பழம் பிடிக்காது. அவர் அதை சாப்பிட ஊக்குவிக்க இப்படியொரு பொய் சொன்னேன். ஆனால் அவர் அதை நம்பி சாப்பிட ஆரம்பித்தார். நிறத்துக்காக ஒரு நபர் தனக்குப் பிடிக்காததைக் கூட செய்வாரா? என்ற கேள்வியும், சமூகம் சுமத்திவைத்துள்ள கற்பிதங்களும் எனக்கு அப்போது புரிந்தது. மனம் வலித்தது.


அதனால் தான் நான் வளர்ந்த பின்னர் எனக்கு ஃபேர்னஸ் க்ரீம் விளம்பரம் வந்தபோது அதை நான் புறக்கணித்தேன். நாம் நாமாக இருப்பதுதான் அழகு. அதை எனக்கு உணர்த்தியவர் அல்ஃபோன்ஸ் புத்திரன். மலர் டீச்சராக நடிக்க முடிவெட்டவில்லை, மேக்கப் போடவில்லை ஏன் புருவத்தைக் கூட திருத்தவில்லை. என் குரல் வேறு கட்டைக் குரலாக இருந்தது. நான் என் அம்மாவிடன் நச்சரித்துக் கொண்டே இருந்தேன். என்னை ஹீரோயின் என்று எப்படி ஏற்பார்கள் என்று கேட்பேன். ஆனால் நான் இன்றும் மலர் டீச்சராகத் தான் அறியப்படுகிறேன். நாம் எப்படி இருக்கிறோமோ அதுதான் அழகு. ஆப்பிரிக்கர்களின் கருப்பு அழகு, அமெரிக்கர்களின் நிறமும் அழகு. நாம் யார் மாதிரியும் மாற வேண்டாம்.




அல்ஃபோன்ஸ் புத்திரன் எப்போதும் தன்னைப் புதுப்பித்துக் கொண்டே இருப்பார். ஒருவேளை அவர் பிரேமம் 2 எடுத்தாலும் புதுமையான ஹீரோயின் தான் யோசிப்பார். அதையும் மீறி என்னை அழைத்தால் நிச்சயம் நடிப்பேன். நான் பள்ளியில் படிக்கும்போது 60% மதிப்பெண் வாங்கும் ஆவரேஜ் மாணவி தான். காப்பி அடித்துக் கூட தேர்வு எழுதியிருக்கிறேன். ஆனால் ஜார்ஜியாவில் மருத்துவம் படிக்கச் சென்ற பின்னர் உயிரின் மகத்துவம் உணர்ந்த்து அத்தனைப் பாடத்திலும் 90% பெற்றேன்.


எனது வாலட்டில் எப்போதும் விபூதி இருக்கும். எனக்கு விபூதி சாப்பிடப் பிடிக்கும். ஆனால் நான் சாப்பிடும் விபூதி மரப்பட்டையில் இருந்து தயாராகும் விபூதி. அப்புறம் எனக்கு சமைக்கப்பிடிக்கும். நான் நன்றாக சமைத்துவிட்டால் அதை சாதனையாக நினைப்பேன். நான் இதுவரை ஷாப்பிங் செய்ததிலேயே ஒரு செருப்பை 300 டாலருக்கு வாங்கியதுதான் அதிகமான செலவு. எனக்கு அதிக விலையில் பொருட்கள் வாங்கப் பிடிக்காது. எந்த உடையில் நான் அழகாக இருப்பேன் என்றே நினைப்பேன். ஆனால், என் அம்மா அப்படியே நேரெதிர். எனக்காக காஸ்ட்லியான ஆடை, அணிகலன் தான் வாங்குவார்.


எனக்கு ரொம்ப பிடிச்ச படம் கன்னத்தில் முத்தமிட்டால். அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு ஒருவேளை என்னையும் என் பெற்றோர் தத்தெடுத்தார்களோ என்று கேட்டு நச்சரித்துள்ளேன். எனக்கு காதலில் நம்பிக்கை உண்டு. ஆனால் பார்த்தவுடன் காதலில் நம்பிக்கையில்லை.


நான் பெண் பிள்ளைகளைத்தான் அதிகம் சைட் அடிப்பேன். இன் தி சென்ஸ், அவர்களின் உடை, அலங்காரம், தலை முடி, ஹேர் டூ, மேக்கப் என்று ரசிப்பேன். எனக்கு மட்டுமல்ல என் அம்மா, தங்கைக்கும் அந்தப் பழக்கம் உண்டு.


இவ்வாறு சாய் பல்லவி கூறியிருக்கிறார்.