ரஜினிகாந்தின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படங்களில் முக்கியமானது 'பில்லா' 1980-ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம், ரஜினியை சூப்பர் ஸ்டாராக உயர்த்திய படமாகக் அமைந்தது. ஆனால், இந்த படம் குறித்து பலருக்கும் தெரியாத ஒரு சுவாரஸ்யமான தகவல் ஒன்று இருக்கிறது. 'பில்லா' படத்தில் நடிகை ஸ்ரீபிரியா நடித்த கதாநாயகி கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க அழைக்கப்பட்டவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா என்பதே அந்த தகவல்.
பில்லா படத்தில் நடிக்க மறுத்த ஜெயலலிதா
1970-களின் இறுதியில் ஜெயலலிதா சினிமாவில் நடிப்பதை குறைத்திருந்த காலம் அது. அப்போது அவர் நல்ல வாய்ப்புகள் கிடைக்காமல் மீண்டும் சினிமாவுக்கு வர முயற்சிக்கிறார் என்ற தகவல்கள் சில இதழ்களில் வெளியாகியிருந்தன. இதற்கு பதிலளிக்கும் வகையில் அவர் எழுதியிருந்த கடிதத்தில், தான் சினிமாவுக்கு வாய்ப்பில்லாமல் போராடவில்லை என்றும், பல பெரிய பட வாய்ப்புகளையே தானாகவே நிராகரித்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
காரண் என்ன ?
அந்தக் கடிதத்தில், "பாலாஜி தயாரித்த 'பில்லா' படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு முதலில் எனக்குத்தான் வந்தது. நான் மறுத்த பிறகுதான் ஸ்ரீபிரியா ஒப்பந்தம் செய்யப்பட்டார். அப்படிப்பட்ட பெரிய வாய்ப்பையே நான் மறுக்க முடிந்தால், நான் சினிமாவுக்கு திரும்ப போராடிக்கொண்டிருக்கிறேன் என்று எப்படி சொல்ல முடியும்?" என்ற கருத்தை ஜெயலலிதா பதிவு செய்திருந்தார்.
அதே கடிதத்தில், தன்னிடம் போதுமான பொருளாதார வசதி இருப்பதால், இனி சினிமாவில் தொடர்ந்து நடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், தனது வாழ்க்கையை நிம்மதியாக வாழ முடியும் என்றும் ஜெயலலிதா குறிப்பிட்டிருந்தார்.
இறுதியாக, அந்த கதாபாத்திரத்தில் நடிகை ஸ்ரீபிரியா நடித்தார். படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன், ரஜினிகாந்தின் திரையுலகப் பயணத்தில் மறக்க முடியாத மைல்கல்லாகவும் அமைந்தது. அதன் பின்னர், 1982-ஆம் ஆண்டு ஜெயலலிதா அரசியலில் முழுமையாக களமிறங்கி, பின்னாளில் தமிழக அரசியலின் முக்கியமான தலைவராக உருவெடுத்தார்.
'பில்லா' திரைப்படம் பின்னர் 2007-ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் அதே பெயரில் ரீமேக் செய்யப்பட்டு, அந்த தலைமுறை ரசிகர்களிடமும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
