இலவச திட்டங்கள் பற்றிய தனது கருத்தை பேசிய அஜித் குமார் பரவலாக விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். அவர் இந்த கருத்தை பேசியதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. சினிமாத் துறையில் உள்ள பெரும்பாலான உச்ச நட்சத்திரங்களுக்கு சமூக எதார்த்தம் பற்றியோ சமூக பிரச்சனைகள் பற்றி தெளிவான புரிதல் சுத்தமாக இருப்பதில்லை. பல நடிகர்கள் குறைவாக பேசுவதற்கான காரணமும் இதனால்தான்.
நடிகர்களுக்கு ஏன் அரசியல் புரிதல் இருப்பதில்லை
வெகுஜன சினிமா பரப்பு என்பது தொடர்ச்சியாக ஒவ்வொரு காலத்திற்கு ஏற்ற நாயக நாயகிகளை உற்பத்தி செய்யும் களமாக மட்டுமே இயங்கி வருகிறது. சினிமா மட்டுமில்லை எந்த வித கலை செயல்பாட்டில் ஈடுபட பெரிய படிப்போ , அறிவாளுமையோ கட்டாயமில்லை. அதற்காக கலைஞர்கள் அறிவியல்பூர்வமாக சிந்திக்கத் தெரியாதவர்கள் என்று அர்த்தமில்லை. உலகின் மாபெரும் தத்துவங்களையும் , அறிவியல் சிந்தனைகளையும் கலைஞர்கள் தங்களது கற்பனைகளை வழியே எட்டியிருக்கிறார்கள். மாபெரும் சமூக மாற்றத்திற்கு கலைஞர்கள் துணை நின்றிருக்கிறார்கள். ஆனால் வெகுஜன சினிமாவில் இயங்கும் கலைஞர்களுக்கு அறிவாளுமை முதன்மையாக கருதப்படுவதில்லை. அவர்களின் தோற்றம் நன்றாக இருக்கிறதா ? இவர்களால் கூட்டத்தை திரட்ட முடியுமா ? இவர்களை நம்பி பணம் முதலீடு செய்ய முடியுமா என்பது மட்டுமே நடிகர்களுக்கு வைக்கப்படும் க்ரைடீரியா. இந்த போட்டியில் ஓடும் நடிகர் நடிகைகள் புற எதார்த்தங்களில் இருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு ஒரே நோக்கத்திற்காக மட்டும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அதே நேரத்தில் சமூக எதார்த்தம் தெரிந்த , பல துறைகளில் ஆளுமைக் கொண்ட திரைக்கலைஞர்களும் இருக்கதான் செய்கிறார்கள்.
ஆனால் ரஜினிகாந்த் , விஜய் , அஜித் , சிம்பு , தனுஷ் என கோலிவுவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களான பலருக்கு சமூக எதார்த்தத்தைப் பற்றிய புரிதல் சுத்தமாக இருப்பதில்லை. நடிகராக இவர்கள் சிறந்த நடிகர்களாக இருக்கலாம். அவர்களின் துறைகளில் அவர்களுக்கு பெரிய விஷய ஞானம் இருக்கலாம். ஆனால் பொதுச் சமூகத்தைப் பொறுத்தவரை அவர்கள் வெகு பின் தங்கியவர்கள். சமகால அரசியல் சூழல் குறித்து சமூக அடுக்குகளில் நிலவும் உள்முரண்கள் குறித்தோ இவர்கள் அறிவிலிகளே. இதில் பல நடிகர்கள் தனிப்பட்ட முறையில் சுய சாதிப் பெருமை பேசுபவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. இன்னும் பலர் சுதந்திரத்திற்கு பிந்தைய காலத்தை சேர்ந்த கருத்துக்களையே இன்னும் நம்புகிறார்கள்.
பா ரஞ்சித் படத்தில் நடித்தாலும் சரி , மாரி செல்வராஜ் படத்தில் நடித்தாலும் சரி இவர்களைப் பொறுத்தவரை சாதி சான்றிதழில் சாதியை நீக்கிவிட்டால் சாதி ஒழிந்துவிடும் என்று நம்புபவர்கள். சமூக பிரச்சனைகள் குறித்து இவர்கள் வாய் திறந்த பெரும்பாலான நேரங்களில் எதையாவது பேசி மாட்டிக்கொள்வார்கள். பல முன்னணி நடிகர்கள் தங்களது ஆரம்ப காலத்தில் நிறைய பேசுபவர்களாகவும் பின் பேசுவதை குறைத்துகொண்டதையும் நாம் பார்க்கலாம். காரணம் அவர்கள் பேசினால் அவர்களிடம் வியப்பதற்கு எந்த ஆளுமைப் பன்பும் இல்லை என்று நமக்கு தெரிந்துவிடும். அதனால் பேசாமல் இருப்பது அவர்களின் ஹீரோ இமேஜை பாதுகாக்கும்.