இன்றைய இணைய உலகின் பேசுபொருள் தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து. 


உலகம் முழுவதும் தினந்தோறும் திருமணங்களும் விவாகரத்துகளும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இந்தியாவில் 1988-ல் 1000 திருமணங்களுக்கு 0.5 ஆக இருந்த விவாகரத்து வீதம், 2019இல் 1000 திருமணங்களுக்கு 13 விவகாரத்துகளாக அதிகரித்திருக்கிறது. அமெரிக்காவில் 37% பேர் திருமணத்துக்குப் பிறகு விவாகரத்து முடிவை எடுக்கின்றனர். 


தேசியக் குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் அறிக்கைப்படி, 2016 முதல் 2020 வரை திருமணம் தொடர்பான பல்வேறு காரணங்களால் இந்தியாவில் 37,591 பேர் தற்கொலை செய்துள்ளனர். அதாவது தினந்தோறும் 20 பேர் தற்கொலை செய்து மாண்டுள்ளனர். இந்தத் தற்கொலைகளில் ஆண்களைவிடப் பெண்களே அதிகம்.


திருமணம் எல்லோருக்கும் இனிமையானதாக இருப்பதில்லை. அதில், பலரும் பல்வேறு பிரச்சினைகளைச் சந்திக்கின்றனர். அவற்றைத் தீர்க்கப் பல்வேறு வழிகளிலும் முயற்சித்து முடியாமல், இறுதியாக விவாகரத்து முடிவை அறிவிக்கின்றனர். அது அவர்களுக்குத் தரும் வலியைச் சொற்களால் விளக்கிவிட முடியாது. 


சாதாரண மனிதர்களின் வலி, அவர்களுடனும் சக குடும்பத்தாரோடு முடிந்துவிடும் நிலையில், பிரபலங்களின் வலி பேசுபொருளாக மாறிவிடுவது பெருந்துயர். பிரபலங்களாக இருப்பதாலேயே, அவர்களின் ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப்படுகிறது, பேசப்படுகிறது, பெரும்பாலும் தவறாகவே புரிந்துகொள்ளப்படுகிறது. 




திரையுலக நட்சத்திரத் தம்பதிகள் தங்களின் விவாகரத்து அறிவிப்பை வெளியிடும்போதே, தனிப்பட்ட சுதந்திரத்துக்கு மதிப்பளிக்கும்படி கோரிக்கை விடுத்தாலும், யாரும் அதற்குச் செவிமடுப்பதே இல்லை. சமீபத்தில் விவாகரத்து பற்றி அறிவித்த நடிகை சமந்தா விவகாரத்திலும் இதுவேதான் நடந்தது. இப்போது நடிகர் தனுஷ் -ஐஸ்வர்யா தம்பதிக்கும் இதுவேதான் நடந்து வருகிறது. 


இதன் உளவியல் காரணங்கள் குறித்து 'ஏபிபி நாடு' செய்தி நிறுவனத்திடம் பேசினார் உளவியல் மருத்துவர் மோகன வெங்கடாசலபதி. ''ஆதி காலத்தில் இருந்தே மனிதர்களுக்கு, தனிமனித வழிபாடு இருந்து வருகிறது. அது தற்போது ஹீரோ வழிபாடாக, தலைவர் வழிபாடாக மாறிவருகிறது. 


நிஜ வாழ்க்கையில் நம்மால் செய்ய முடியாத காரியங்களைக் கதாநாயகர்கள் செய்யும்போது, நம்மை அறியாமலேயே நம் ஆழ்மனதில் அவர்கள் பிம்பமாக மாறிவிடுகிறார்கள். அந்த வகையான நபர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் துயரச் சம்பவங்கள் நடக்கும்போது, அதை அவர்களின் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அதைக்குறித்துத் தொடர்ந்து பேசி, தங்களின் ஆற்றாமையைத் தீர்க்க முயல்கின்றனர். பிரபலங்களை, அவர்களின் வாழ்க்கையை ரொமான்ட்டிசைஸ் செய்கிறோம். இதனால் அவர்களுக்கு ஏற்படும் வலிகளை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. 




திருமணமோ, விவாகரத்தோ அது சம்பந்தப்பட்டவர்களின் தனிப்பட்ட விவகாரம். ஆனால் அவர்கள் சேர்ந்தாலும் செய்தியாகிறது. பிரிந்தாலும் செய்தியாகிறது. தொழில்நுட்பமும், சமூக வலைதளங்களும் அதை ஊதிப் பெரிதாக்குகின்றன.


ஆனால் நம் பக்கத்து வீட்டில் ரஜினிகாந்த், எதிர் வீட்டில் அஜித் இருந்தால் தினந்தோறும் பார்த்துப் பார்த்து நமக்கே சலிப்புத் தட்டிவிடும். பெண், பொன், பணம், வெற்றி ஆகியவற்றிலும் இதேதான் நடக்கிறது. இது மிக மிக இயல்பான ஒன்று'' என்கிறார் மோகன வெங்கடாசலபதி.


எல்லோருக்கும் பிரச்சினைகள் இருக்கின்றன: லட்சுமி ராமகிருஷ்ணன் 


''எல்லோரும் அவரவர் வாழ்க்கையில் பிரபலங்களே. பொது வாழ்க்கையில் இருப்போரைப் பலருக்குப் பிடிக்கும். சிலருக்குப் பிடிக்காது. பொதுவாழ்க்கையில் இருப்பவர்களை ஏராளமானோர் பின்தொடர்வதால், அவர்கள் பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும். கூடுதல் அக்கறையுடன் நடந்துகொள்ள வேண்டும். அதற்காக போலித்தனங்களுடன் இருப்பதில் எனக்கு உடன்பாடில்லை. 


யாராக இருந்தாலும் நம்முடைய நேர்மறையான, மகிழ்ச்சியான தருணங்களை மட்டுமே சமூக வலைதளங்களில் பதிவிடுகிறோம். நம்மைப் பின்தொடர்வோர் அதைப் பார்க்கும்போது, அட என்ன மாதிரியான வாழ்க்கை வாழ்கிறார்கள். அவர்களைப் போல நாமும் வாழ வேண்டும் என்று நினைக்கலாம். ஆனால் எல்லோருக்கும் பிரச்சினைகள், போராட்டங்கள் இருக்கின்றன. அதன் எல்லைகள்தான் மாறுபடுகின்றன.


 



இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன்


பிரபலங்களைப் பற்றித் தேவையில்லாமல், பொய்யாக கிசுகிசுக்கள் வெளியிடுவது தவறு. அதே நேரத்தில் பிரபலங்கள் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தோ, முக்கிய முடிவு பற்றியோ பொதுவெளியில் அறிவிக்கும்போது மரியாதையாகவும் கூடுதல் பொறுப்புணர்வுடமும் சட்டப்படி சரியாகவும் நடந்துகொள்ள வேண்டும். பிறரும் அதைத் தவறாக விமர்சிக்காமல், அதற்கு மரியாதை கொடுக்க வேண்டியது அவசியம். சம்பந்தப்பட்டவர்கள் அப்படி நடந்துகொள்ளாத சூழலில், பிறர் குரல் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது'' என்று இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்தார். 


அடுத்த வீட்டு அறையில்தான் ஆர்வம்


இதை இன்னொரு வகையிலும் பார்க்கலாம் என்கிறார் உளவியல் மருத்துவர் மோகன வெங்கடாசலபதி. ''அடுத்த வீட்டுப் படுக்கறையில் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க எல்லோருக்கும் ஆசை இருக்கிறது. நம் பக்கத்து வீடுகளில் நடக்கும் சண்டை, பேச்சுகளையே சுவாரசியத்துடன் கவனிப்பதைப் பெரும்பாலானோர் வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். நம்முடைய வலியை, பிறரின் வலியோடு ஒப்பிட்டுப் பார்த்து திருப்தி அடைகிறோம். இந்த நிலையில், நம்மால் தொட முடியாத, அணுக முடியாத உயரத்தில் இருக்கும் நபரின் அந்தரங்கத்தை விமர்சிப்பதில் ஒருவித மகிழ்ச்சி கிடைக்கிறது. ஆழ்மனதின் வக்கிரங்களில் இதுவும் ஒன்று.


பிரபலங்களும் நம்மைப் போன்ற மனிதர்கள்தான். என்ன, அவர்களின் பணம், புகழ் மட்டும் அதிகமாக இருக்கும். ஆனால், சாதாரண மனிதர்களுக்கு நடக்கும் அனைத்துமே பிரபலங்களுக்கும் ஏற்படும். பிரச்சினைகள் ஏற்படும் சூழலில், நாமாவது 4 பேரிடம் பேசி ஆலோசனை கேட்கலாம். ஆனால் அவர்களால் அதைக்கூடப் பிறரிடம் கேட்க / பகிர முடியாது. இதனாலேயே அவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாது பெரிதாகி, விரிசல் விழுந்திருக்கலாம். 


பிரபலங்களை வேற்றுக்கிரக வாசிகளாக, தவறே செய்யாதவர்களாக நினைப்பதை விட்டுவிட வேண்டும். நம் வீட்டில் இருப்பதைப் போன்றே அல்லது அதைவிட அதிகமாகவே அவர்களுக்கும் பிரச்சினைகள் ஏற்படலாம். 


புலியைப் பார்த்தால் பயந்து ஓடுகிறோம். பசித்தால் உண்கிறோம் என்பதுபோல, நம்முடைய மரபணுக்களிலேயே கலந்த, வழக்கமான உணர்வுகளில் (Primordial emotions) ஒன்றுதான் தனிமனித வழிபாடு. இது உள்ளேயே வடிவமைக்கப்பட்ட ஒன்று. துறவிகளால்தான் நமக்குப் பிடிக்காதவர்களின் துன்பங்களை மகிழ்ச்சியின்றிக் கடந்துபோக முடியும். இல்லையெனில், 'அவன் செஞ்ச அட்டூழியத்துக்கு, சரியான தண்டனை கிடைச்சுருக்கு!' என்றுதான் சொல்வோம். கல்வியாலும், வாழ்வியல் நெறிமுறைகளாலுமே அதை மாற்ற வேண்டும். 


 



உளவியல் மருத்துவர் மோகன வெங்கடாசலபதி


100 சதவீதம் கருத்தொருமித்த தம்பதிகள் இருப்பது அரிது. விவாகரத்து என்பதை ஒன்றுக்கு ஆயிரம் முறை யோசித்து முடிவு செய்ய வேண்டும். முடிவெடுத்த பிறகு விவாகரத்தை வாழ்க்கையின் மற்றோர் அத்தியாயமாகக் கருதி, கடந்துசெல்ல வேண்டும். 


நாம் நினைத்து நினைத்து ஆச்சரியப்பட்ட ஆதர்சத் தம்பதிகள் எல்லாம் பிரிந்திருக்கிறார்கள். இது சாதாரணம். அதை நாகரிக சமூகமாகிய நாம், முதிர்ச்சியுடன்தான் கலந்துசெல்ல வேண்டும்.'' என்று உளவியல் மருத்துவர் மோகன வெங்கடாசலபதி தெரிவித்தார்.


18 ஆண்டுகள் காதல் திருமண வாழ்க்கை, வளர்ந்த இரு மகன்கள் முன்னிலையில் முடிவுக்கு வருவது என்பதே தனுஷ் - ஐஸ்வர்யாவுக்குப் பெருந்துயர்தான். நம்மால் வெளிச்சத்துக்கு வந்தவர்கள் என்பதாலேயே அவர்களது படுக்கறையை எட்டிப் பார்ப்பதும், கதைகள் புனைந்து குளிர் காய்வதும் வக்கிரமான ஒன்று. மண முறிவு அறிவிப்புக்குப் பின்னர் அவர்கள் நிம்மதியாக வாழ விடுவதுதான், நாம் செய்ய வேண்டியதாக இருக்கும்.