நடிகை சமந்தா மற்றும் பிரபல இயக்குநர் ராஜ் நிடிமொரு இன்று கோயம்புத்தூரில் திருமணம் செய்துகொண்டுள்ளனர். யார் இந்த ராஜ் நிடிமொரு இவர் இயக்கிய படங்கள் மற்றும் சொத்து மதிப்பு விபரங்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Continues below advertisement


சமந்தா ராஜ் நிடிமொரு திருமணம் 


நடிகை சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இருவரும் 2021 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். நாக சைதன்யா பிரபல நடிகை ஷோபிதாவை கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்ட நிலையில் சமந்தா சிங்கிளாக வலம் வந்தார். சினிமாவில் தொடர் தோல்விகள் , மையோசிடிஸ் பாதிப்பு என தனிப்பட்ட வாழ்க்கையில் பல சிக்கல்களை சமந்தா தனியாக எதிர்கொண்டு வந்தார்


இப்படியான நிலையில் பிரபல இயக்குநர் ராஜ் நிடிமொரு மற்றும் சமந்தா காதலித்து வருவதாக பல்வேறு தகவல்கள் வெளியாகின. குடும்ப விழாக்கள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் இருவரும் சேர்ந்து காணப்பட்டனர். ஆனால் இருவரும் தங்கள் காதலை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இப்படியான நிலையில் இன்று சமந்தா மற்றும் ராஜ் நிடிமொரு திருமணம் செய்துகொண்டுள்ளார்கள். கோயம்புத்தூர் ஈஷா யோகா மையத்தில் உள்ள லிங்க பைரவி கோவிலில் இருவருக்கும் நெருங்கிய வட்டத்தினர் மத்தியில் திருமணம் நடைபெற்றது. தனது திருமண புகைப்படங்களை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் .


யார் இந்த ராஜ் நிடிமொரு 


பாலிவுட் சினிமாவில் பிரபல இயக்குநராக திகழ்ந்து வருபவர் ராஜ் நிடிமொரு. இவர் ஃபேமிலி மேன் , கோ கோவா கோன் , கன்ஸ் & குலாப்ஸ் , சிட்டெடல் ஆகிய பிரபல இணையத் தொடர்கள் மற்றும் படங்களை இயக்கியுள்ளார். ஆந்திராவில் திருப்பதியில் பிறந்த இவர் பி டெக் பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர். இவருக்கு ஏற்கனவே ஷியாமலா தே என்பவருடன் திருமணமாகி கடந்த 2022 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். இவர் இயக்கிய ஃபேமிலி மேன் , சிட்டெடல் ஆகிய தொடர்களில் சமந்தா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். இந்த காலத்தில் தான் இருவருக்கும் இடையில் நல்ல நட்பு ஏற்பட்டதாகவும் அந்த நட்பு தற்போது திருமணம் வரை சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது 


சொத்து மதிப்பு


தென் இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் 100 கோடி வரை இருக்கலாம் என கூறப்படுகிறது. அதே நேரம் இந்தியில் முன்னணி இயக்குநராக திகழும் ராஜ் நிடிமொருவின் சொத்து மதிப்பு 83 முதல் 85 கோடி வரை இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சமந்தாவின் திருமணம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை காட்டிலும் அதிர்ச்சியையே கொடுத்துள்ளது என சொல்லலாம்