55வது கேரள மாநில அரசின் திரைப்பட விருதுகள் நேற்று நவம்பர் 3 ஆம் தேதி வழங்கப்பட்டன. திருச்சூரில் உள்ள ராமநிலயத்தில் நடைபெற்ற இந்த விழாவில், கேரள கலாச்சாரம் மற்றும் திரைப்படத்துறை அமைச்சர் சஜி செரியன் வெற்றியாளர்களை அறிவித்தார். நடிகர் பிரகாஷ் ராஜ் தலைமையிலான ஏழு பேர் கொண்ட நடுவர் குழு இந்த விழாவில் கலந்து கொண்டது. சிறந்த நடிகர் விருதை வென்றதன் மூலம் 7 முறை கேரள அரசின் சிறந்த நடிகர் விருதை வென்ற ஒரே நடிகர் என்ற பெருமையை மம்மூட்டி பெற்றுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக மோகன்லால், ஊர்வசி இருவரும் 6 முறை வென்றுள்ளனர்.
சிறந்த நடிகை விருது வென்ற ஷம்லா ஹம்ஸா
சிறந்த நடிகைக்கான விருதை ஃபெமினிச்சி பாத்திமா என்கிற படத்திற்காக 32 வயதான ஷம்லா ஹம்ஸா வென்றார். இந்த விருதை அவர் வென்றதைத் தொடர்ந்து சினிமா ரசிகர்களின் கவனம் அவர் பக்கம் திரும்பியுள்ளது. ஃபாசில் முகமது இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ஃபெமினிச்சி பாத்திமா படத்தில் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார் ஷம்லா ஹம்ஸா. ஆணாதிக்க சமுதாயத்தில் குடும்ப சூழலில் ஒரு தாயாகவும் மனைவியாகவும் ஒரு பெண் எதிர்கொள்ளும் சவால்களை மிக எதார்த்தமான மொழியில் இப்படம் சித்தரித்தது.
யார் இந்த ஷம்லா ஹம்ஸா
பாலக்காடைச் சேர்ந்த ஷம்லா துபாயில் 11 ஆண்டுகள் ஆர்ஜேவாக பணியாற்றியுள்ளார். ஃபெமினிச்சி பாத்திமா படத்தில் நடித்தபோது அவருக்கு மகள் பிறந்து ஆறு மாதங்களே ஆகியிருந்தன. ஒரு பக்கம் தனது குழந்தையை கவனித்துக் கொண்டு இன்னொரு பக்கம் இப்படத்தில் அவர் நடித்துள்ளார். மற்ற அண்ணைகளைப் போல் இந்த காலம் தனக்கு ரொம்ப சவாலானதாக இருந்ததாகவும் ஆனால் படக்குழுவினர் அவருக்கு ஆதரவாக இருந்து கவனித்துக்கொண்டதாக ஷம்லா ஹம்ஸா தெரிவித்துள்ளார். இந்த படத்தைப் பார்த்து பலர் தன்னிடம் பெண்ணியத்தை இவ்வளவு எளிமையாக விளக்கக் கூடிய ஒரு படத்திற்காக ரொம்ப காலமாக காத்திருந்ததாக கூறியதாக ஷம்லா தெரிவித்தார்.