தமிழ் ஆவணப்படமான ‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ 95வது ஆஸ்கர் விருதுகளில் ஆவணப்பட குறும்படப் பிரிவில் வெற்றி பெற்ற முதல் இந்தியப் படமாக வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. அறிமுக இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸ் இயக்கத்தில் நெட்ஃபிளிக்ஸில் வெளியான இந்த ஆவணப்படம் ‘ஹவ் டூ யூ மெஷர் எ இயர்?’, ‘தி மார்தா மிட்செல் எஃபெக்ட்’ மற்றும் ‘ஸ்ட்ரேஞ்சர் அட் தி கேட்’ ஆகிய படங்களுடன் போட்டியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்:
விருதை வென்ற கோன்சால்வேஸ் "நமக்கும் நமது இயற்கை உலகத்துக்கும் இடையே உள்ள புனிதமான பிணைப்பு, பழங்குடி சமூகங்களின் சுயமரியாதை, மற்ற உயிரினங்களின் மீதான பச்சாதாபம், அவற்றுடனான சகவாழ்வு குறித்துப் பேசுவதற்கான வாய்ப்பாக இந்த மேடையை நான் பயன்படுத்திக்கொள்கிறேன்” என்று தனது ஏற்புரையில் கூறியுள்ளார்.
39 நிமிடங்கள் கொண்ட ”தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்" திரைப்படம், கைவிடப்பட்ட இரண்டு யானைக் குட்டிகளான ரகு மற்றும் அம்மு மற்றும் அவற்றின் பராமரிப்பாளர்களான பொம்மன் மற்றும் பெல்லி ஆகியோருக்கு இடையே உள்ள பிரிக்க முடியாத பிணைப்பை வர்ணிக்கிறது. தென்னிந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள முதுமலை தேசிய பூங்காவின் கண்கவர் இயற்கை சூழலையும் இந்த ஆவணப்படம் படமாக்கியுள்ளது.
வனவிலங்கு வழித்தடம்:
பழங்குடி மக்கள் எவ்வாறு இயற்கையுடன் இணைந்து வாழ்கிறார்கள் என்பதை இது ஆராய்கிறது. மேலும் இந்தத் திரைப்படம் விலங்கு-மனித பந்தம் மற்றும் அவர்கள் இணைந்து வாழும் திறன் ஆகியவற்றின் அழுத்தமான விவரிப்பு. இது தவிர சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இழையோடும் பாரம்பரியம் தொடர்பான நுண்ணறிவை பகிர்ந்துகொள்கிறது.
முதுமலை வனவிலங்கு சரணாலயம் நீலகிரி மாவட்டத்தில் வடமேற்குப் பகுதியில், கோவைக்கு வடமேற்கே சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த சரணாலயம் கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களுடனான அதன் எல்லைகளால் மசினகுடி, தெப்பக்காடு, முதுமலை, கார்குடி மற்றும் நெல்லகோட்டா என ஐந்து எல்லைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. பல பாதுகாக்கப்பட்ட பகுதிகளை இணைக்கும் வனவிலங்கு வழித்தடமாக இந்த வனப்பகுதி உள்ளது.
2,300 யானைகள்:
இது வடக்கில் பந்திப்பூர் தேசிய பூங்கா மற்றும் நாகர்ஹோல் தேசிய பூங்கா, மேற்கில் வயநாடு வனவிலங்கு சரணாலயம் மற்றும் தெற்கில் முகூர்த்தி தேசிய பூங்கா மற்றும் சைலண்ட் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா ஆகியவற்றால் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காக்கள், சரணாலயங்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் சுமார் 3,300 சதுர கிலோமீட்டர் காடுகளில் பரவி உள்ளது. இந்தப் பகுதியில் சுமார் 1,800-2,300 யானைகள் வசிக்கின்றன.
இந்த சுற்றுலாத தளத்தைப் பார்வையிட சிறந்த நேரம் எது?
இது ஆண்டு முழுவதும் திறந்திருந்தாலும், மார்ச் முதல் ஜூன் , செப்டம்பர் முதல் அக்டோபர் வரை ஆகிய மாதங்களில் இந்த பகுதியில் சுற்றுலா மேற்கொள்வது பரிந்துரைக்கப்படுகிறது.