ஆடு ஜீவிதம் என்கிற புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள படம் ’தி கோட் லைஃப்’
தி கோட் லைஃப் (The Goat Life)
மலையாளத்தில் பென்யமின் எழுதிய ஆடு ஜீவிதம் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள படம் தி கோட் லைஃப் (The Goat Life). தேசிய விருது வென்ற ப்ளெஸ்ஸி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். தமிழ் , மலையாளம் , இந்தி கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் ப்ரித்விராஜ் இந்தப் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ப்ரித்விராஜின் மனைவியாக அமலா பால் நடித்துள்ளார் ஏ.ஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஆடு ஜீவிதம் நாவலை படமாக எடுக்க இருப்பதாக இயக்குநர் ப்ளெஸ்ஸி கடந்த 2010 ஆம் ஆண்டு அறிவித்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு சிக்கல்களால் இந்த முயற்சி தடைபட்டது. தற்போது இப்படம் முழுமையடைந்து சர்வதேச திரைப்படம் விழாக்களில் அங்கீகாரம் பெற்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. ஆடு ஜீவிதம் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது
படத்தின் கதை
கேரளாவைச் சேர்ந்த இஸ்லாமியப் பின்புலத்தைக் கொண்ட ’ நஜீப் முகமது ‘ வேலை தேடி செளதி அரேபியாவிற்குச் செல்கிறார். செழிப்பான தனது சொந்த நிலத்தையும் தனது நேசத்திற்குரிய மனைவியையும் விட்டு பிழைப்பிற்காக சென்ற அவர் அங்கு ஆடு மேய்க்கும் கொத்தடிமையாக அடைக்கப் படுகிறார். துயரம், தனிமை, இறை நம்பிக்கை, மனித மனங்களின் கோரமுகம் என உணர்ச்சிக் குவியலாகவும் தத்துவார்த்தமாகவும் என பல்வேறு கோணங்களில் இருந்து இந்த கதையை நாவலாக எழுதினார் எழுத்தாளர் பென்யமின். இந்த நாவலுக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது வழங்கப் பட்டது. அதே நேரத்தில் அரபு நாடுகளில் இந்தப் புத்தகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மலையாளத்தில் எழுதப்பட்ட இந்த நாவல் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. தற்போது படமாகியுள்ள இந்த கதை காட்சி ரீதியாகவும் நடிப்பு ரீதியாகும் பார்வையாளர்களுக்கு மிகப்பெரிய அனுபவமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு சவால்களுக்குப் பிறகு இந்தப் படத்தை எடுத்துள்ள படக்குழு ஒவ்வொரு காட்சியாக படத்தை மெருகேற்றி இருக்கிறார்கள். அதனை உணர்த்தும் வகையில் தற்போது வெளியாகியுள்ள படத்தின் ட்ரெய்லர் அமைந்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் இப்படம் வெளியாக இருக்கிறது. ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.