குபேரா டிரைலர்
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நாயகனாக நடித்துள்ள குபேரா திரைப்படம் வரும் ஜூன் 20 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. நாகர்ஜூனா , ராஷ்மிகா மந்தனா , ஜிம் சார்ப் உள்ளிட்டவர்கள் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். தேவி ஶ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைத்துள்ளார். குபேரா படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி இன்று ஹைதராபாத் ஜே.ஆர்.சி மன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் குபேரா படத்தின் டிரைலரும் வெளியிடப்பட்டுள்ளது
ஒருபக்கம் மாஸ் கமர்சியல் படங்களை கொடுத்து வந்தாலும் இன்னொரு பக்கம் தனது நடிப்பிற்கு தீணி போடும் விதமான கதைகளையும் தனுஷ் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் குபேரா திரைப்படம் தனுஷ் நடிப்பில் வெளியான குறிப்பிடத் தகுந்த படமாக இருக்கும் என்பதை குபேரா படத்தின் டிரைலரை வைத்து சொல்லலாம். பணம் மற்றும் அதிகாரத்தை மையமாக வைத்து ஒரு தரப்பினருக்கு இடையில் நடக்கும் சூழ்ச்சிகள். ஒரு சாதாரண மனிதனாக தனுஷ் இந்த சூழ்ச்சிகளில் எப்படி வந்து சிக்கிக் கொள்கிறார். ஒரு கட்டத்திற்கு மேல் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள இந்த கும்பலை எப்படி எதிர்த்து நிற்கிறார் என்பதை இந்த படத்தின் கதையாக புரிந்துகொள்ளலாம். நாகர்ஜூனாவின் கதாபாத்திரம் இரு தரப்பினருக்கு இடையில் நிற்கும் ஒரு கதாபாத்திரமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் ராஷ்மிகா மந்தனாவுக்கும் படத்தில் முக்கியமான பங்கு இருப்பதை கவனிக்கலாம். சீரியஸான ஒரு மெசேஜை வைத்து அதை த்ரில்லிங்கான ஒரு அனுபவமாக குபேரா படம் வழங்கும் என்பதை இந்த டிரைலர் உத்தரவாதம் அளிக்கிறது. படத்தின் கதைக்கு ஏற்ற வகையில் தேவிஶ்ரீ பிரசாதின் பின்னணி இசையும் அமைந்துள்ளது.
குபேரா படத்தின் மூலம் தனுஷ் தெலுங்கில் அறிமுகமாக இருக்கிறார். ஆனால் வழக்கமான ஒரு கமர்சியல் நடிகராக மட்டுமில்லாமல் தேர்ந்த நடிகராக தன்னை நிறுவிக் கொள்ள வேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கிறார்.