நாளை மோதும் கூலி மற்றும் வார் 2
ஆகஸ்ட் 14 சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு இரு பிரம்மாண்டம் திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன. தமிழில் ரஜினிகாந்த் மற்றும் பிற நட்சத்திரங்கள் நடித்துள்ள கூலி மற்றும் இந்தியில் ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ள வார் 2 . கூலி படத்திற்கு தமிழ் மட்டுமில்லாமல் பிற மொழிகளிலும் சிறப்பான வரவேற்பு இருந்து வருகிறது. அதே நேரம் வார் 2 படத்திற்கு இந்தி ரசிகர்களிடம் மட்டுமே வரவேறு உள்ளது. இரண்டு படங்களில் முதல் வாரத்தில் மக்களிடம் நல்ல விமர்சனங்களை பெறும் படமே வசூல் ரீதியாக வெற்றிபெறும் என்கிற நிலையுள்ளது. இந்நிலையில் திரையுலகில் ரஜினிகாந்த் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததை வாழ்த்தி ஹ்ரித்திக் ரோஷன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ரஜினி பற்றி ஹரித்திக் ரோஷன்
1986 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் இந்தியில் நடித்த படம் பகவான் தாதா. இப்படத்தில் ஹ்ரித்திக் ரோஷன் குழந்தை நட்சத்திரமாக ரஜினியுடன் நடித்திருந்தார். ரஜினியுடன் பணியாற்றிய அனுபவம் பற்றி ஹரித்திக் ரோஷன் ஒருமுறை பேசியிருந்தார்.
" ரஜினியுடன் நடித்தபோது அவர் எவ்வளவு பெரிய லெஜண்ட் என்று எனக்கு தெரியாது. ஒரு முட்டாள் சிறுவனாக நான் இருந்தேன். என்னைப் பொறுத்தவரை அவர் ரஜினி அங்கிள். எனக்கு தோன்றிய மாதிரி நான் அவரிடம் பேசுவேன். இன்று அவருடன் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தால் நான் ரொம்ப வித்தியாசமானவனாக இருப்பேன். அந்த மாதிரியான ஒரு நடிகருடன் சேர்ந்து நடிப்பது பெரும் சுமையாக எனக்கு இருந்திருக்கும். நாங்கள் சேர்ந்து நடிக்கும் போது நான் ஏதாவது தவறு செய்தால் இயக்குநர் உடனே கட் சொல்லிவிடுவார். உடனே ரஜினி அவர் தப்பு செய்த மாதிரி எல்லாரிடமும் மன்னிப்பு கேட்பார். ஒவ்வொரு முறை நான் தப்பு செய்யும் போது நான் பதற்றமாகிவிடக் கூடாது என்பதற்காக. ரஜினி அந்த பழியை ஏற்றுக் கொண்டார். " என ஹ்ரித்திக் ரோஷன் கூறியிருந்தார்
தற்போது தனது எக்ஸ் பக்கத்தில் " ஒரு நடிகனாக என் பயணத்தை உங்களுடன் தொடங்கினேன். நீங்கள் என்னுடைய குருக்களில் ஒருவர். இன்றும் ஒரு பெரிய உந்துதலாக இருந்து வருகிறீர்கள். சினிமாவில் 50 ஆண்டுகாலத்தை நிறைவு செய்ததற்கு வாழ்த்துக்கள்" என கூறியுள்ளார்