பிரபல நடிகர் சிலம்பரசன் ரசிகர்களிடம் அப்டேட் கேட்டு தொந்தரவு செய்யாதீர்கள் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.
வெந்து தணிந்தது காடு 50 ஆவது நாள் வெற்றிக்கொண்டாட்டம் இன்று சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் வைத்து நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய சிலம்பரசன் “வெந்து தணிந்தது காடு படம் வெளியாவதற்கு முன்னர் எனக்கு ஒரு பயம் இருந்தது. காரணம் இதில் எந்த ஒரு கமர்ஷியல் அம்சங்களும் இல்லை. நான் இதில் முத்து கதாபாத்திரமாகவே நடித்திருந்தேன். ஆனால், வித்தியாசமான சினிமாவை ரசிகர்கள் ஆதரித்து உள்ளனர்.” என்றார் .
மேலும் பேசிய சிலம்பரசன், “ படம் உருவாகி கொண்டிருக்கும் போதே ரசிகர்கள் அப்டேட் கேட்டு கொண்டே இருக்கின்றனர். நீங்கள் அப்படி தொடர்ந்து அப்டேட் கேட்கும் போது, நாங்கள் தவறான முடிவை எடுக்க வாய்ப்பு இருக்கிறது. உங்களை சந்தோஷப்படுத்துவதே முதல் விஷயம். அதனால் அதற்கு தயவு செய்து கொஞ்சம் நேரம் கொடுங்கள்.” என்று பேசினார்.
முன்னதாக, இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான 'வெந்து தணிந்தது காடு' படம் பிளாக் பஸ்டர் ஹிட் படமாக 50 நாட்கள் ஓடியதை கொண்டாடும் வகையில், அப்படத்தின் போஸ்டர் ஒன்றினை வெளியிட்டு தனது சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டது.
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் பல ஆண்டுகளுக்கு பின்னர் இயக்குனர் கௌதம் மேனன் - நடிகர் சிம்பு கூட்டணியில் வெளியான திரைப்படம் "வெந்து தணிந்தது காடு". 2016ம் ஆண்டு வெளியான 'அச்சம் என்பது மடமையடா' திரைப்படத்திற்கு பிறகு நான்காவது முறையாக இவர்கள் கூட்டணியில் உருவான திரைப்படம் என்பதால் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது.
நல்ல வரவேற்பு பெற்ற படம் :
நடிகர் சிம்பு ஜோடியாக சித்தி இத்னானி நடித்திருந்த இப்படத்தில் ராதிகா, சித்திக், நீரஜ் மாதவ், ஏஞ்சலினா ஆப்ரஹம் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் இப்படத்தின் பாடல்கள் எல்லாம் படம் வெளியவதற்கு முன்னரே ரசிகர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பை பெற்றது.
விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களுக்குப் பின் சிலம்பரசன் - கௌதம் வாசுதேவ் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி 3வது முறையாக இப்படம் மூலம் மீண்டும் இணைந்தது. பிரமாண்டமான டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா மற்றும் பெரும் பொருட்செலவில் பல தரப்பட்ட விளம்பரத்திற்கு பிறகு, இப்படம் செப்டம்பர் 15ம் உலகளவில் உள்ள திரையரங்குகளில் மிகவும் கோலாகலமாக வெளியிடப்பட்டது. வழக்கமான கௌதம் மேனன் திரைப்படங்களை காட்டிலும் இது சற்று வித்தியாசமாக ஒரு கேங்ஸ்டார் படமாக அமைந்தது படம் குறித்த எதிர்பார்ப்பினை மேலும் அதிகரித்தது.
சிம்புவின் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் :
ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த 'வெந்து தணிந்தது காடு' ஒரு பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படமாக வெற்றி பெற்று பாக்ஸ் ஆபிஸில் வசூலை தாறுமாறாக குவித்தது. இந்த நிலையில் படம் வெளியாகி 50 நாள் கடந்துள்ள நிலையில், அதனைக்கொண்டாடும் விதமாக, படக்குழுவினருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டுள்ளது.