டைம் ட்ராவல் கதைகள் சமீப காலமாக மக்கள் மத்தியில் பிரபலமாக பேசப்படும் ஒரு வார்த்தை. அப்படி ஒரு விஷயம் உண்மையாக இருந்தால் எதிர்காலத்துக்கு சென்று வாழ்க்கையை ரீவைண்ட் செய்யலாம். இது கேட்க எந்த அளவுக்கு ஸ்வாரஸ்யமாக இருக்கிறதோ அதை மிகவும் அழகாக கலகலப்பாக ஒரு படமாக்கி கொடுத்து இருந்தார் அறிமுக இயக்குநர் ஆர். ரவிக்குமார்.
இருப்பினும் டைம் ட்ராவல் என்பது ஒரு சிக்கலான கருத்து என்பதை ரசிகர்களுக்கு எந்த ஒரு குழப்பமும் இன்றி தெளிவாக படமாக்கப்பட்ட படம் 'இன்று நேற்று நாளை'. இப்படம் வெளியாகி இன்றுடன் 9 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், கருணாகரன், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலரின் நடிப்பில் 2015ம் ஆண்டு வெளியான இப்படத்தை சி.வி.குமார் மற்றும் ஞானவேல் ராஜா இணைந்து தயாரிக்க ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்து இருந்தார். டைம் ட்ராவல் என சொல்லும்போதே ரசிகர்களுக்கு ஏற்படும் வியப்பை படம் முழுக்க கொடுத்து இருந்தார்.
ஒரு டைம் ட்ராவல் மெஷின் மூலம் கடந்த காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் பயணம் செய்து அதில் ஏற்படும் சிக்கலை மிகவும் ஸ்வாரஸ்யமான கதையாக சித்தரிக்கப்பட்டு இருந்தது ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.
சொந்த தொழில் தொடங்க முனைப்பாக இருக்கும் ஹீரோ விஷ்ணு விஷால் மற்றும் அவரின் நண்பன் கருணாகரன் இருவரும் எதேச்சையாக விபத்தில் விஞ்ஞானி ஒருவரை சந்திக்க அவர் பரிசோதனை செய்யும் டைம் ட்ராவல் மெஷின் பற்றி தகவல்களை சேகரித்து ஏமாற்றி அதை கைப்பற்றுகிறார்கள். அதை வைத்து பணம் சம்பாதிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.
இறந்த காலத்துக்கு சென்று தங்களையும் அறியாமல் அவர்கள் செய்யும் ஒரு குழப்பம் நிகழ்காலத்தையும் பாதிக்கிறது. அதை சரி செய்ய முயற்சி செய்யும் போது டைம் ட்ராவல் மெஷினில் கோளாறு ஏற்படுகிறது. அதனால் இறந்த காலத்தில் வசமாக மாட்டி கொண்ட நண்பர்கள் இருவரும் எப்படி அதில் இருந்து மீண்டு நிகழ்காலத்துக்கு வந்தார்கள் என்பது ஸ்வாரஸ்யமான ஒரு அனுபவத்தை கொடுத்தது.
படத்தின் முன்பாதி கலகலப்பாக இருந்தாலும் பிற்பகுதியில் சில குழப்பங்கள் ஏற்பட்டது. லாஜிக் மிஸ்ஸிங் என்றாலும் அதுவும் கலகலப்பாக ரசிக்கும் படி இருந்ததை ரசிகர்கள் ரசித்தார்கள்.
இந்த சிக்கல்களுக்கு இடையே விஷ்ணு விஷால் - மியா ஜார்ஜ் காதல் மிகவும் அழகாக ரசிக்கும்படியாக இருந்தது. இது ஒரு ஃபேன்டசி படம் படம் என்றாலும் அதிக அளவிலான கிராபிக்ஸ் காட்சிகள் பயன்படுத்தப்படாமல் மிகவும் இயல்பாக கதையுடன் ஒன்றி இருந்தது.
லாஜிக் மிஸ்ஸிங் என்றாலும் நல்ல ஒரு என்டர்டெயின்மென்ட் படமாக இருந்தது. அதுதான் இன்று வரை அதன் நினைவலைகளை சுழல வைக்கிறது.