விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் உருவாகியுள்ள 'கட்டா குஸ்தி 2' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவாகியுள்ள இந்த இரண்டாம் பாகம், காமெடி , ஆக்ஷன் இணைத்து மேலும் விறுவிறுப்பான கதையாக உருவாகியுள்ளது. இயக்குநர் செல்லா அய்யாவு மீண்டும் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மியுடன் கருணாஸ், காளி வெங்கட், யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையை சீன் ரோல்டன் அமைத்துள்ளார்.
கட்டா குஸ்தி 2 டிரெய்லர்
தற்போது வெளியாகியுள்ள ட்ரெய்லரில், முதல் பாகத்தின் முடிவில் குடும்ப வாழ்க்கையைத் தொடங்கிய வீரா மற்றும் கீர்த்தி, தற்போது குழந்தையுடன் புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொண்டிருப்பது காட்டப்படுகிறது. அதே நேரத்தில் தேசிய அளவிலான மல்யுத்த வீராங்கனையாக உயர வேண்டும் என்ற கீர்த்தியின் கனவு இன்னும் தொடர்கிறது. அந்த கனவை நனவாக்குவதற்காக வீட்டுப் பொறுப்புகளை விஷ்ணு விஷாலின் கதாபாத்திரம் ஏற்றுக்கொள்வதும், பின்னர் எதிர்பாராத சூழ்நிலையால் அவரும் மல்யுத்த உலகிற்குள் களமிறங்குவதும் டிரெய்லரின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது.
கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான 'கட்டா குஸ்தி' திரைப்படம் ஃபேமிலி ஆடியன்ஸிடம் பெரியளவில் வரவேற்பைப் பெற்றது. ஆணாதிக்க மனப்பான்மையுடன் இருக்கும் இளைஞன், திறமையான மல்யுத்த வீராங்கனையைத் திருமணம் செய்து கொண்ட பிறகு அவருக்குள் ஏற்படும் மாற்றங்களையும், பெண்களின் கனவுகளுக்கு குடும்ப ஆதரவு எவ்வளவு முக்கியம் என்பதையும் நகைச்சுவையுடன் படம் எடுத்துக் காட்டியது. விமர்சகர்களிடமும் பார்வையாளர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்ற அந்தப் படம் வசூலிலும் வெற்றி பெற்று, விஷ்ணு விஷாலின் முக்கியமான வெற்றிப் படங்களில் ஒன்றாக அமைந்தது.
அந்த வெற்றியின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள 'கட்டா குஸ்தி 2' முதல் பாகத்தின் கதையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது. முதல் பாகத்தைப் போல இரண்டாவது பாகமும் அதே அளவு வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கலாம்
