விஷ்ணு விஷால் , ஐஸ்வர்யா லெக்ஷ்மி இணைந்து நடித்துள்ள கட்டா குஸ்தி 2 திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தை இயக்கிய செல்லா அய்யாவு இந்த படத்தை இயக்கியுள்ளார். ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, கருணாஸ், முனிஸ்காந்த், காளி வெங்கட், கருணாகரன், ஜாரா, மோக்ஷா மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். கட்டா குஸ்தி முதல் பாகத்தைப் போலவே கட்டா குஸ்தி 2 திரைப்படம் ரசிகர்களை கவர்ந்ததா என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்
முதல் பாகத்தில் ஏற்பட்ட சம்பவங்களுக்குப் பிறகு வீரா மற்றும் கீர்த்தியின் திருமண வாழ்க்கை புதிய கட்டத்தை அடைகிறது. மல்யுத்த வீராங்கனையான கீர்த்தியும், தனது பழைய ஆணாதிக்க மனப்பான்மையை மாற்றிக் கொண்ட வீராவும் குடும்ப வாழ்க்கையை சமநிலைப்படுத்த முயற்சிக்கிறார்கள். இந்த நிலையில், புதிய எதிரிகள், குடும்பத்திற்குள் உருவாகும் சிக்கல்கள் மற்றும் மல்யுத்தத்தை மையமாகக் கொண்ட புதிய மோதல்கள் அவர்களின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றுகின்றன. தனது குடும்பத்தையும் மனைவியையும் காப்பாற்ற வீரா மீண்டும் மல்யுத்த களத்தில் இறங்க வேண்டிய சூழல் உருவாகிறது. நகைச்சுவை, குடும்ப உணர்வுகள், ஆக்ஷன் மற்றும் விளையாட்டு அம்சங்களை இணைத்து, முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டுள்ளது கட்டா குஸ்தி 2.
குடும்பத்துடன் பார்க்க ஏற்ற படம்
கட்டா குஸ்தி 2 குறித்து விமர்சகர் ஒருவர் எக்ஸ் பக்கத்தில் இப்படி கூறியுள்ளார் " நகைச்சுவை, நெகிழ்ச்சியான தருணங்கள் மற்றும் உணர்ச்சிகள் நிறைந்த ஒரு அருமையான குடும்பத் திரைப்படமாக கட்டா குஸ்தி 2 திரைப்படம் உருவாகியுள்ளது . பல்வேறு படங்களின் இரண்டாவது பாகங்கள் வெளியாகி தோல்வியை சந்தித்து வரும் நிலையில் நகைச்சுவை மற்றும் பெண்களை மையப்படுத்திய உணர்வுகளைச் சரியாகக் கலந்து இயக்குநர் செல்லா அய்யாவு இப்படத்தை சிறப்பாக கையாண்டுள்ளார்.
திரைக்கதை மற்றும் நடிகர்களின் தேர்வு மிகச்சிறப்பு. விஷ்ணு விஷால் தனது இயல்பான வசீகரத்தால் படத்தைக் கையில் எடுத்துக்கொண்டுள்ளார்; ஐஸ்வர்யா லெக்ஷ்மி மீண்டும் ஒரு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அதே சமயம் சிறுமி ஜாரா அனைவரின் கவனத்தையும் ஈர்த்து அசத்துகிறார்!
முனிஷ்கான் ,காளி வெங்கட் மற்றும் குறிப்பாக கருணாஸ் ஆகியோரின் நகைச்சுவை அபாரம் அவர்களின் 'டைமிங்' மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. ஷால் ரோல்டனின் இசை படத்தின் சூழலோடு மிக அழகாகப் பொருந்துகிறது. படத்தில் விஜய் பற்றிய ரெஃபரன்ஸ் காட்சி மிகவும் கலகலப்பானது, ஒவ்வொரு முறையும் அரங்கையே அதிரவைக்கிறது! சிறிய லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் முற்போக்கான கருத்து மற்றும் மூன்றாம் பாகத்திற்கான அந்தச் சுவாரஸ்யமான குறிப்பு ஆகியவை இப்படத்தை ஒரு முழுமையான பொழுதுபோக்குத் திரைப்படமாக மாற்றுகின்றன. குடும்பத்துடன் பார்க்க ஏற்ற படம்!"
