பாலா இயக்கத்தில் ஆர்யா மற்றும் விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘அவன் இவன்’. இந்த திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடினர்.அவன் இவன் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. எதார்த்த கதைக்களம் என்பதை தாண்டி ஆர்யா மற்றும் விஷால் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். இருவரும் இணைந்து நடித்திருந்த காட்சிகளை ரசிகர்கள் கொண்டாடினார்கள். ஆர்யா மற்றும் விஷால் இருவருமே நீண்ட கால நண்பர்கள்தான். திரையில் மட்டுமல்லாமல் திரைக்கு பின்னால் பல மேடைகளிலும் கூட ஒருவரை ஒருவர் கலாய்த்துக்கொள்வதும் இயல்பான ஒன்றுதான். இந்த நிலையில் இவர்கள் இருவரின் காம்பினேஷனில் ஒரு திரைப்படம் வெளிவந்தால் சிறப்பாக இருக்கும் என்ற ஆசை விஷால், ஆர்யா ரசிகர்களுக்கு உண்டு. அதனை நிறைவேற்றும் வகையில் அரிமா நம்பி, இருமுகன் போன்ற ஆக்ஷன் படங்களின் இயக்குநர் ஆனந்த் ஷங்கர் ஆர்யா, விஷாலை வைத்து புதிய படம் இயக்க போவதாக அறிவித்தார்.
“எனிமி” என பெயர் வைக்கப்பட்ட இந்த புதிய படத்தில் விஷால் ஹீரோவாகவும், ஆர்யா வில்லனாகவும் நடித்துள்ளனர். டிக்டாக் புகழ் மிருனாளினி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைத்துள்ளார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் குறிப்பாக ஆர்யாவின் காட்சிகளை படமாக்கிவிட்டார் இயக்குநர். கொரோனா ஊரடங்கு காரணமாக கிடப்பில் போடப்பட்ட படங்களுள் “எனிமி” படமும் ஒன்றுதான்.இந்நிலையில் படத்தின் டீசர் நாளை மாலை (ஜூலை 24) மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட வேலைகள் நடைப்பெற்று வருகின்றன.இந்த படம் ஆர்யா நடிப்பில் உருவாகும் 32 வது படமாகும். விஷாலுக்கு 30 வது படமாக தயாராகி வருகிறது.எனிமி படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் தற்போது விஷால், பெயர் வைக்கப்படாத 31 வது படத்தில் நடித்து வருகிறார். ஹைதராபாத்தில் 'விஷால் 31' படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனை அறிமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்கி வருகிறார். விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்து வருகிறது. நாயகியாக டிம்பில் ஹயாத்தி கமிட்டாகியுள்ளார். ஆக்ஷன் எண்டர்டைனராக உருவாகி வரும் இந்த படத்தில் பாபுராஜ், யோகி பாபு, அகிலன், ரவீனா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். விஷால் 31 படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடிக்க இயக்குநர் திட்டமிட்டுள்ளாராம். இதற்கான வேலைகள் முழு ஈடுபாட்டோடு நடைப்பெற்று வருகிறது. படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் மற்றும் சண்டைக்காட்சிகள் தற்போது ஐதராபாத்தில் படமாக்கப்பட்டு வருவதால் விஷால் அங்கேயே முகாமிட்டுள்ளாராம். இந்நிலையில் ஹீரோ மற்றும் வில்லன் இருவரும் மோதிக்கொள்ளும் காட்சி ஒன்றில் நடித்த ஆர்யாவிற்கு முதுகில் காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவர் வரவழைக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் தொடர்ந்து நடித்து வருகிறாராம் விஷால்.