நடிகரும் தேமுதிக தலைவரும் கேப்டன் விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானர். இது தமிழ்நாடு திரைத்துறையினர் மத்தியில் மட்டும் இல்லாமல், ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், அவரது மறைவின் போது அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியாத நடிகர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் நிர்வாகிகள் பலர் கடந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்தே மறைந்த விஜயகாந்தின் நினைவிடத்திற்குச் சென்று தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று நடிகர்கள் விஷால் மற்றும் ஆர்யா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த விஷால், “ நடிகர் விஜயகாந்த் வாழும்போதே கடவுளாக வாழ்ந்தவர். நடிகர் சங்கம் சார்பில் இறுதி அஞ்சலி செலுத்தியிருக்க வேண்டும். நடிகர் சங்க கட்டிடத்திற்கு அவரது பெயரைச் சூட்ட யாரும் ஆட்சேபனை தெரிவிக்கமாட்டார்கள் என நினைக்கின்றேன். நடிகர் சங்கத்தில் இது குறித்து பரிசீலனை செய்யப்படும்” என குறிப்பிட்டு பேசியுள்ளர். 


மேலும், “ கலையுலகில் மட்டும் இல்லாமல் பொதுமக்கள் மத்தியிலும் நல்ல மனம் கொண்ட மனிதன் என பெயரெடுத்தவர் நடிகர் விஜயகாந்த். நல்ல தைரியமான அரசியல்வாதி என பெயரெடுத்தவர். பொதுவாகவே மறைந்தவர்களை நாம் கடவுள் என கூறுவோம். ஆனால் கேப்டன் விஜயகாந்தினை உயிருடன் இருக்கும்போதே பலர் சாமி என கூறியுள்ளனர். அவர் செய்த நல்ல காரியங்கள் அவருக்கு இந்த பெயரை பெற்றுத் தந்தது. அவர் ஏதே ஓரிரு வருடங்கள் மட்டும் அந்த நல்ல காரியத்தினை செய்துவிட்டு இருக்கவில்லை. அவரது படங்கள் வெளியாகும்போது, படம் தொடங்குவதற்கு முன்னர் அவர் மக்களுக்கு செய்த நல்ல காரியங்கள் போடப்படும். அப்படியான கடவுள் நடிகர் சங்க கட்டிடத்தின் பத்திரத்தினை மீட்டுக்கொண்டு வந்தார்.


அந்த நடிகர் சங்கத்தில் நான் இப்போது பொதுச் செயலாளராக இருப்பது எனக்கு பெருமை. நாங்கள் நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்று அவரது வீட்டிற்குச் சென்றோம். அப்போது ’அவர் நடிகர் சங்க பத்திரத்தை மீட்டுக்கொண்டு வந்தபோது, வீட்டு லாக்கரில் இருந்த எனது நகைகளை அனைத்தையும் வெளியே எடு நான் பத்திரத்தை மீட்டுக்கொண்டு வந்திருக்கின்றேன் என கண்ணீரோடு சொல்லி பத்திரத்தை லாக்கரில் வைத்தார்’ என பிரேமலதா அம்மா அவர்கள் எங்களிடம் கூறினார். அவரை நேரில் சந்திக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. அவரது அலுவலகத்தில் எப்போதும் நான்கு பேர் சமைத்துக்கொண்டே இருப்பார்கள் எனவும், அங்கு வரும் அனைவருக்கும் குறிப்பாக காசு இல்லாமல் தவித்து வந்த உதவி இயக்குநர்கள் அனைவருக்கும் கேப்டன் ஐயா அலுவலகத்திற்கு வந்தால் யாரும் பசியுடன் வெளியே போகக் கூடாது என ஒருநாள் இரண்டு நாள் இல்லை பல ஆண்டுகள் செய்தார். இதுதான் எனக்கு முன்னுதாரணம். அனைவரையும் சரி சமமாக பார்த்த ஒரு நடிகர் கேப்டன் ஐயாதான். படப்பிடிப்பின்போது அங்கு பணிபுரியும் 250 பேர்களுக்கும் அவர் என்ன சாப்பிடுகின்றாரோ அதுதான் சாப்பிடவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அவர் மறைந்தபோது என்னால் வரமுடியாத சூழலில் இருந்தேன். அவரின் குடும்பத்திற்கு நான் கடமைப்பட்டுள்ளேன்” என தெரிவித்தார்.