நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா 2015லேயே ’குட்டி’ சேதுபதியாக நானும் ரவுடிதான் படத்தில் அறிமுகமானவர். அது மட்டுமல்லாமல் 2019ல் விஜய் சேதுபதியுடன் சிந்த்பாத் என்னும் படத்தில் இணைந்து நடித்தார். தந்தையைப் போலவே மகனும் தற்போது வித்தியாசமான காட்சிகளில் பட்டையைக் கிளப்பி வருகிறார்.





தற்போது அவரது இன்ஸ்டா வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அண்மையில் ’மானாட மயிலாட’ புகழ் கோகுல்நாத் தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். சண்டைக்காட்சிக்கான வீடியோவான அதில் சூர்யா குத்துவது உதைப்பது தற்காத்துக்கொள்வது என முழு ஸ்டண்ட் ஒன்றை நிகழ்த்தி ஆச்சரியப்படுத்தியிருந்தார். அதைப் பார்த்த பலரும் எதிர்காலத்துக்காக சூர்யா தற்போதே தன்னை தயார்படுத்திவருகிறார் என கமெண்ட் செய்திருந்தனர். சிந்துபாத் படத்தில் அவரது நடிப்புக்காக அனைவரும் பாராட்டியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக விஜய் சேதுபதி, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா சமந்தாவுடன் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, ராஜ் அண்ட் டிகே அடுத்து எடுக்கயிருக்கும் 'தி பேமிலி மேன் 3' வெப்சீரிஸில் விஜய் சேதுபதி முக்கியமான ரோலில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்தன. இதுகுறித்து விசாரித்தபோது, 'தி பேமிலி மேன் சீசன் 3' யில் விஜய் சேதுபதி நடிக்கவில்லை என கூறப்பட்டது.





மேலும், ராஜ் அண்ட் டிகே எடுக்கயிருக்கும் வேறொரு புதிய சீரிஸில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்கவே பேச்சு வார்த்தை நடக்கிறது எனவும் சொல்லப்பட்டது.





அதை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது இணையத்தில் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குநர்கள் ராஜ் அண்ட் டிகே உடன் விஜய் சேதுபதி அமர்ந்திருக்கும் புகைப்படமே அது. முன்னதாக நடிகை ராஷி கண்ணா, விஜய் சேதுபதியுடன் எடுத்த ஒரு புகைப்படமும் வைரலானது. இந்த வெப் சீரிஸில் நடிகை ராஷி கண்ணா நடிப்பதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விஜய் சேதுபதிக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். தமிழர்களை தவறாக சித்தரித்த சர்ச்சை இயக்குநர்களுடன் விஜய் சேதுபதி இணைந்திருக்கக் கூடாது என பதிவிட்டுள்ளனர்.