'மன்னர் வகையறா' திரைப்படம் தொடர்பான நிதி விவகாரத்தில், அந்தப் படத்தின் தயாரிப்பாளர் கோபி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ரூ.5 கோடி இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வழக்கின் பின்னணி
இந்த வழக்கு, திரைப்படத் தயாரிப்பாளர் அரசு பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கோபி தொடர்ந்த புகாரின் அடிப்படையில் நடைபெற்று வந்தது. 2018-ஆம் ஆண்டு விமல் நடித்து வெளியான 'மன்னர் வகையறா' அரசு ஃபிலிம்ஸ் சார்பாக கோபி தயாரித்தார். தயாரிப்பாளர் கோபி தாக்கல் செய்த மனுவில், திரைப்படத் தயாரிப்புக்காக நடிகர் விமலுக்கு வழங்கப்பட்ட நிதி மற்றும் ஒப்பந்த நிபந்தனைகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்றும், இதனால் தனக்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தார். அந்த இழப்புக்காக ரூ.5 கோடி இழப்பீடு வழங்குமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார். நடிகர் விமல் பெற்றதாகக் கூறப்படும் தொகையை திருப்பிச் செலுத்தும் வகையில் வழங்கப்பட்ட காசோலை, வங்கியில் போதிய நிதி இல்லாத காரணத்தால் திரும்பியதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, பரிவர்த்தனை ஆவணங்கள் மற்றும் காசோலை மோசடி தொடர்பான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
ஆஜராகாத விமல்
இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, நடிகர் விமல் தரப்பின் விளக்கத்தையும் நீதிமன்றம் கேட்டறிந்தது. அப்போது, தயாரிப்பாளர் தரப்பின் குற்றச்சாட்டுகள் மற்றும் நிலுவைத் தொகை தொடர்பான விவரங்கள் குறித்து நடிகர் விமல் பதிலளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
வழக்கின் விசாரணை பல கட்டங்களாக நடைபெற்ற நிலையில், நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய தேதிகளில் நடிகர் விமல் தொடர்ந்து ஆஜராகவில்லை என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு சிறைத்தண்டனை விதித்ததுடன், அந்த உத்தரவை அமல்படுத்த காவல்துறைக்கு தேவையான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது. கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் உத்தரவும் இதன் ஒரு பகுதியாக வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை எதிர்ப்பு நடிகர் விமல் மேல்முறையீடு செய்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
