பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குநர்கள் தமிழ் சினிமாவில் கோலோச்சி வந்தாலும் ஒரு சில அறிமுக இயக்குநர்கள் முதல் படத்திலேயே தனக்கான முத்திரையை பதிந்துவிடும் அளவுக்கு சிறப்பான படைப்புக்களை கொடுத்த வரலாறும் நமது தமிழ் சினிமாவில் உள்ளது. அப்படி ஒரு படக்குழுவில் பெரும்பாலும் புதியவர்கள், பிரபலமாகதவர்கள் இணைந்து ஒரு வெற்றி படத்தை கல்ட் அந்தஸ்துடன் இன்று வரை கொண்டாடவைக்கும் வகையில் அமைந்த ஒரு படம் தான் 2010ம் ஆண்டு சற்குணம் இயக்கத்தில் நடிகர் விமல், ஓவியா, சரண்யா பொன்வண்ணன், இளவரசு, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் கிளாசிக் திரைப்படம் 'களவாணி'. இப்படம் வெளியாகி இன்றுடன் 14 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
தஞ்சையின் காவிரி நதி பாயும் பச்சைப்பசேல் கிராமத்து பின்னணியில் கதைக்களத்தை அமைந்து கண்களுக்கு குளிர்ச்சி விருந்து படைத்தது இருந்தார் இயக்குநர். மண்ணுக்கே உரித்தான கிராமத்து சண்டை, நடுவே மலர்ந்த காதல் எப்படி ஊர் பிரச்சினையை ஒரு முடிவுக்கு கொண்டு வருகிறது என்பது தான் இப்படத்தின் கதைக்களம்.
வேலை வெட்டி எதுவும் இன்றி ஊர் சுற்றி திரியும் இளைஞர்கள், அவர்கள் அடிக்கும் ரவுசுகள், லூட்டிகள் என மைனரை போல வம்பு செய்யும் விமல் பள்ளி மாணவியான ஓவியாவை எப்படி தன்னுடைய காதல் வலையில் சிக்க வைக்க இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லி களவாணி தனம் செய்து மயக்குகிறார். அவர்களின் காதல் நிறைவேறியதா? பிளவுபட்ட ஊர் இந்த காதலால் ஒன்று சேர்ந்ததா? என்பது இந்த படத்தின் கிளைமாக்ஸ்.
சரண்யாவின் 'ஆனி போய் ஆடி போய் ஆவணி வந்தா எம் மகன் டாப்பா வருவான்' என்ற டயலாக் வேலைவெட்டி இல்லாத மகன்களை கொண்டாடும் அம்மாகளின் பிரதிபலிப்பு. கண்டிப்பான அதே சமயம் பாசமான தந்தையாக இளவரசு, எது செய்தாலும் தானாக சிக்கிக் கொள்ளும் கஞ்சா கருப்பு, முறைப்பான அண்ணனாக ஓவியாவின் கதாபாத்திரம் என படத்துக்கு அழகு சேர்ந்தார் துணை கதாபாத்திரங்கள்.
மெல்லிய காதல் கதை, கதைக்களத்தோடு ஒன்றிய காமெடி, பசுமையான பாடல்கள் என படத்தின் வெற்றியை உறுதிப்படுத்தியது. இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு மிக நல்ல ஒரு இயக்குநர் கிடைத்தார். விமலை ரசிகர்களின் கவனத்துக்கு கொண்டு வந்த ஒரு படம். ஓவியாவுக்கு நல்ல ஒரு அறிமுகத்தை கொடுத்தது 'களவாணி' திரைப்படம். நகைச்சுவையுடன் கூடிய அலட்டல் இல்லாதால் காதல் கதையை மக்கள் என்றும் விரும்புவார்கள் கொண்டாடுவார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக வெளியான படம் 'களவாணி.