90ஸ் கிட்ஸ்களின் மிகவும் ஃபேவரட் இயக்குநர்களின் பட்டியலின் நிச்சயம் இயக்குநர் விக்ரமனின் பெயரும் இருக்கும். உறவுகள், குடும்பம், செண்டிமெண்ட், மென்மையான காதல் சப்ஜெக்ட் படங்களில் அவரை அடித்துக்கொள்ள ஆளே இல்லை. 1990இல் வெளியான புது வசந்தம் திரைப்படம் மூலம் அறிமுகமான விக்ரமன், அதனைத் தொடர்ந்து பூவே உனக்காக, வானத்தைப் போல, சூர்ய வம்சம், உன்னை நினைத்து, பிரியமான தோழி, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் என தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நீங்காத ஒரு இடத்தை பிடித்தார்.
இப்படி கொடி கட்டி பறந்த இயக்குனர் விக்ரமனின் வாழ்க்கையில் மிகவும் துயரமான ஒரு சூழ்நிலை இருந்து வருவது குறித்து அவரின் மனைவி உருக்கமான பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். மிகவும் திறமையான குச்சிப்புடி கலைஞராக இருந்து வந்தவர் இயக்குனர் விக்ரமனின் மனைவி ஜெயப்ரியா. அவர் கடந்த ஐந்து ஆண்டுகாலமாக நடமாட முடியாதபடி படுத்தப்படுக்கையாக இருந்து வருகிறார்.
“முதுகு வலி பிரச்சினைக்காக பரிசோனை செய்யப்பட்டபோது அது கேன்சராக இருக்கக் கூடும் என சொல்லி பயாப்சி செய்து பார்த்தார்கள். அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் அதற்கு அரைமணி நேரம் தான் ஆகும் என சொன்னார்கள். ஆனால் அறுவை சிகிச்சை செய்ய மூன்றரை மணி நேரமானது. அறுவை சிகிச்சைக்கு பிறகு என்னால் கால் விரலை கூட அசைக்க முடியவில்லை. வீட்டுக்கு டிஸ்சார்ஜ் செய்ய சொல்லி பிசியோதெரபி செய்து கொள்ள சொன்னார்கள். மருத்துவமனையில் தப்பான ஆபரேஷன் செய்துவிட்டார்கள். அனைத்து விதமான சிகிச்சையும் செய்து பார்த்தும் என்னுடைய கால்கள் சரியாகவில்லை. என்னுடன் எப்போதுமே இரண்டு நர்ஸ்கள் இருப்பார்கள்.
என்னுடைய இந்த நிலையை நினைத்து என்னுடைய கணவர் மிகவும் மனவேதனையில் இருக்கிறார். என்னை விட்டுவிட்டு எங்கும் செல்வதே இல்லை. சூர்யவம்சம் 2 படத்திற்கான அழைப்பு கூட வந்தது, ஆனால் என்னை தனியாக விட்டுச் செல்ல முடியாது என்ற காரணத்தால் என்னால் போக முடியாது என சொல்லிவிட்டார். என்னுடைய கால்கள் சரியாகி நான் எழுந்து நடக்கும் வரையில் பேனாவில் கை வைக்க மாட்டேன் என இருக்கிறார். அவர் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் முழுவதும் என்னுடைய மருத்துவ செலவுக்கே போய்விடுகிறது. சொத்துக்கள் அனைத்தையும் விற்று தான் என்னை கவனித்து வருகிறார்.
உறவுக்காரர்கள் திருமணத்துக்கு போயிட்டு வாங்க என சொன்னால் கூட அவர் போவது கிடையாது. எங்களுக்கு வர வேண்டிய பணமே நிறைய இருக்கு. ஆனால் யாருமே அதைத் தருவதற்கு முன்வரவில்லை. நான் வருத்தப்பட்டால் என்னுடைய கணவரால் அதை தாங்கிக் கொள்ள முடியாது. அவர் உடைந்து கண்கலங்குவார் என்பதால் கடந்த ஐந்து ஆண்டுகளாக என்னை நானே தைரியமாக வைத்து கொள்ள முயற்சிக்கிறேன்” என மிகுந்த மனவேதனையுடன் பேட்டி அளித்துள்ளார் விக்ரமனின் மனைவியும் நாட்டியக் கலைஞருமான ஜெயப்ரியா.
இவர்களது இந்த சோகமான நிலைமை கோலிவுட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.