மனமுடைந்து போன திரையுலக நடிகர்கள்


 நடிகர் விஜய்காந்த் அவர்களின் மறை தமிழ் சினிமாவைச் சேர்ந்த பல்வேறு நடிகர்களை மனமுடைந்துப் போகச் செய்துள்ளது. குறிப்பாக விஜயகாந்த் அவர்களின் சமகாலத்தில் தங்களது சினிமா பயணத்தைத் தொடங்கிய பலருக்கு அவரது இறப்பு ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது . சமூக வலைதளங்களில் மற்றும் நேரில் சென்று தமிழ் சினிமா பிரபலங்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள் . இப்படியான நிலையில் நடிகர் விஜயகாந்த் அவர்களின் நெருங்கிய நண்பரான நடிகர் ஆனந்த ராஜ், விஜயகாந்த் உடன் தன்னுடைய அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.


அவருக்கு நான் நகம் வெட்டி விட்டிருக்கிறேன்


 நடிகர் ஆனந்தராஜ் பேசியபோது  ”விஜய்காந்த் இறந்துவிட்ட செய்தியை தெரிந்துகொண்டதும் இப்படி ஒரு செய்தியை கேட்கவோ எற்றுக் கொள்வதற்கும் என் மனசு ரொம்ப தயங்கியது.  இது நடந்துவிடக் கூடாது என்கிற பதற்றம் எனக்குள் எப்போது இருந்திருக்கிறது. இந்த சோகமான நிகழ்வு இப்போது நடந்திருக்கக்கூடாது என்பதே என்னுடைய ஏக்கமாக இருக்கிறது. அவருடைய குடும்பத்திற்கு இது  மிகப்பெரிய இழப்பு அவர்களுக்கு வெறும் இரங்கலை மட்டும் தெரிவிப்பது போதுமானது இல்லை.  விஜயகாந்த் செய்த பல நல்ல செயல்களுக்காக அவரது  ஆன்மாவை இறைவனிடம் சேர்ந்து அவரை கடவுள் நன்றாக பார்த்துக் கொள்வார்” என்று நினைக்கிறேன்.


நானும் அவரும் நடிகர்கள் என்பதைத் தவிர சகோதரர்களாக பழகியிருக்கிறோம்.  அவர் குடும்ப விழாவில் நானும் என் குடும்ப விழாவில் அவரும் கலந்துகொண்டிருக்கும். அவருக்கும் எனக்கு இருக்கும் நட்பு கடல் கடந்து  மலேசியா சிங்கப்பூர்  உள்ளிட்ட நாடுகளின் மக்கள் வரை தெரிந்த ஒன்று. எனக்கும் அவருக்கு ஒரு இடைவெளி  வந்தது அரசியல் களத்திற்கு அவர் வந்தபோதுதான். நான் சார்ந்திருந்த கட்சியில் அவரும் இணைய வேண்டும் என்று ஆசைப்பட்டு அதற்காக நான் சார்ந்திருந்த கட்சியில்  பரிந்து பேசினேன்.


  1982 ஆம் ஆண்டில் இருந்து நான் அவரை பக்கத்தில் இருந்து பார்த்து வருகிறேன். திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு ஒரு  அங்கீகாரம் தந்தவர்களில் நான் அவரை முதன்மையானவராக பார்க்கிறேன். நிறைய விஷயங்களில் ஆறுதலாக தட்டிக் கொடுக்கும் ஒரு கையாக அவர் எப்போதும் இருந்திருக்கிறார். நாங்கள் இருவரும் பக்கத்து பக்கத்து தெருவில் வசித்து வந்தோம் நான் ஒருபக்கம் கல்லூரிக்குச் செல்வேன். அவர் படப்பிடிப்பிற்கு  செல்வார். கார்கில் போரின் போது நடிகர் சங்கம் சார்பாக ஒரு ரயில் பிடித்து பாதிக்கப் பட்டவர்களுக்கு நாங்கள் உணவு வழங்க சென்றோம். அப்போது என்மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையும் என்னிடம் அவர் ஒப்படைத்த பொறுப்பும் அவர் மீதான மரியாதையை பலமடங்கு உயர்த்தியது.  


ஒரு நடிகர் என்பதற்கு அப்பால் அவருக்கு நகம் வெட்டி விடும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. அவருடைய திருமணம் மதுரையில் தமுக்க மைதானத்தில்  நடந்தது அப்போது புலன் விசாரணை 100 ஆவது நாள் போஸ்டர் ஒருபக்கமும், அவருடைய திருமண அழைப்பு போஸ்டர் இன்னொரு பக்கம் இருந்தது எனக்கு நினைவு இருக்கிறது . அவரது திருமணம் முடிந்த மூன்றாவது நாள், அவரது மனைவி சமைத்த உணவை சாப்பிடும் பாக்கியம் எங்களுக்கு கிடைத்தது. அவரது முதல் குழந்தை பிரபாகரன் பிறந்தபோது, நாங்கள் அவரை பார்க்க ஆர்வமாக இருந்தோம். இன்று அவரது கட்சி அலுவலகத்திற்கு என்று சென்று என் சகோதரனுக்கு செய்ய வேண்டிய எல்லா கடமைகளையும் நான் செய்வேன்.