விஜயகாந்த் மறைவு
தேமுதிக தலைவர் மற்றும் நடிகர் விஜயகாந்த் அவர்களின் மறைவு தமிழ் அரசியல் களத்திலும் திரையுலகிலும் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விஜயகாந்த் அவரது மறைவைத் தொடர்ந்து அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள். மேலும் அவரது மறைவை அனுசரிக்கும் வகையில் இன்று திரையரங்குகளில் காலை காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நடிகராக அரசியல் தலைவராக பல்வேறு சாமானிய மக்களின் மனதில் தாக்கம் செலுத்தியவராக விஜய்காந்த் இருக்கிறார். அவரது மறைவு பல்வேறு மக்களுக்கு விஜயகாந்துடன் தங்களது நினைவுகளை கிளர்த்தி உள்ளது. விஜயகாந்த் தொடர்பான பல்வேறு தகவல்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.
நண்பர்கள் இல்லாமல் அவரை பார்க்க முடியாது..
விஜயராஜ் என்கிற விஜயகாந்த் மதுரையில் 1952ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி பிறந்தார். இவரது குடும்பம் ரைஸ் மில் நடத்தி வந்ததால் சிறுவயதில் நல்ல வசதியாகவே வளர்ந்தார். விஜயராஜுக்கு 10ஆம் வகுப்புக்கு மேல் படிக்க ஆர்வம் இல்லாததால் அவரது குடும்பம் அவரை மேற்கொண்டு கட்டாயப்படுத்தவில்லை. படிப்பின் மீது ஆர்வம் இல்லாமல் இருந்த இவருக்கு சினிமாவின் மீதான ஆர்வம் மட்டும் தொற்றிக்கொண்டது. அதற்கு முக்கிய காரணம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் படங்களை அனுதினமும் பார்ப்பது, படத்தின் காட்சிகள் குறித்து தனது நட்பு வட்டம், உறவினர் வட்டம் என அனைவரது மத்தியிலும் உரையாடுவது என அன்றைய கால சினிமா குறித்தான உரையாடலில்தான் இவரது பொழுதுகள் கழிந்தது. குறிப்பாக எம்.ஜி ஆர் நடித்த எங்கள் வீட்டுப் பிள்ளை படத்தினை 70 முறைக்கு மேல் விஜயகாந்த் பார்த்துள்ளாராம்.
ஒரு பக்கம் சினிமா என்று இருந்தாலும் தனது சொந்த ரைஸ்மில்லில் இருக்கும் வேலைகளைத்தானே செய்வது, ஓய்வு கிடைக்கும் நேரங்களை எல்லாம் தன்னுடைய நண்பர்களுடன் அமர்ந்து சீட்டு விளையாடுவது அரட்டை அடிப்பது என கழிப்பது அவருக்கு பிடித்தமான ஒரு பொழுதுபோக்காக இருந்து வந்துள்ளது. எளிய மக்களுடன் நெருங்கிய தொடர்புடன் இருந்த விஜயகாந்த் சினிமாவிற்குள் வந்த பிறகும் அதே இயல்பை கடைபிடித்தார்.
இறுதி அஞ்சலி
கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த விஜயகாந்த் இன்று காலை 6.10 மணிக்கு காலமானதாக தெரிவிக்கப்பட்டது. விஜயகாந்த் உடல் மியாட் மருத்துவமனையில் இருந்து விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் விஜயகாந்த் உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்துக்கு பொதுமக்கள், தொண்டர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் தேமுதிக அலுவலகத்திலேயே அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.