மறைந்த நடிகர் விஜயகாந்தின் உடல் சென்னை, தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர், பொதுமக்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


நேற்று காலை உடல்நலக்குறைவால் நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் காலமான நிலையில், அவரது மறைவு ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விஜயகாந்தை இறுதியாக ஒருமுறை காண தமிழ்நாடு முழுவதும் இருந்து மக்கள் சென்னையை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.


நேற்று சென்னை, தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அவரது உடல் பொதுமக்கள் பார்வைக்காக தீவுத்திடலுக்கு மாற்றப்பட்டுள்ளது.  தொடர்ந்து இன்று மதியம் தொடங்கி விஜயகாந்தின் உடல் மீண்டும் தேமுதிக அலுவலகத்துக்கு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு மாலை 4.45 மணிக்கு அடக்கம் செய்யப்பட உள்ளது. 


நேற்று முதலே பல பிரபலங்கள் விஜயகாந்துக்கு நேரிலும் இணையதளத்திலும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், இன்றும் அவரது உடலுக்கு தொடர்ந்து திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகை குஷ்பு, அவரது கணவரும் இயக்குநருமான சுந்தர்.சியுடன் வருகை தந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.


சொக்கத்தங்கம் விஜயகாந்த்


தொடர்ந்து பேசிய குஷ்பு, “படப்பிடிப்பு தளத்தில் எப்பவுமே அவர் கேப்டன் தான். நாங்க எல்லாரும் அவர்கூட நடிக்கும்போது எங்களுக்கு ஒரு தைரியம் இருக்கும். எங்கள காப்பாத்த அவர் இருக்கார்னு. இன்னைக்கு இந்த கூட்டம் ஒரு நல்ல நடிகருக்கோ, அரசியல் தலைவருக்காகவோ இல்லாமல் நல்ல மனிதருக்கு கூடி இருக்கிறது.  சினிமா துறைமட்டுமில்லாமல் மக்களுக்கும் ஏதாவது ஒரு ப்ரச்னை இருந்தால் இறங்கி வேலை பார்த்திருக்கார். அவர்கூட பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைச்சிருக்கு, அதுமட்டுமில்லாமல் அவர் எதிர் வீட்ல கொஞ்ச நாள் இருந்திருக்கேன். அவர் எங்கள பொருத்தவரை, மக்கள பொருத்தவரை, தமிழ்நாட்டை பொருத்தவரை ஒரு நல்ல மனிதர் என்றெல்லாம் கேப்டன் சார் என்றுதான் சொல்வோம். சொக்கத்தங்கம் என்றால் கேப்டன் மட்டும் தான்” எனப் பேசியுள்ளார்.


தொடர்ந்து பேசிய சுந்தர். சி ”நடிகர்களில் ஒரு மாமனிதர் என்றால் அவர் கேப்டன் தான். தனக்கென்ன என ஒதுங்கி போகாமல் மற்றவர்கள் பிரச்னையை தீர்க்க வருவார். நான் சினிமா துறைக்கு வந்த புதிதில் நான் சொல்லாத சில வார்த்தைகள் பத்திரிகையில் வந்தது. அப்போ வளரும் காலத்தில் இப்படி பேசக்கூடாது என அக்கறையுடன் என்னைக் கூப்பிட்டு அறிவுரை சொன்னார் விஜயகாந்த். அவர் ஷூட்டிங்கில் மட்டும் எல்லாரும் பாதுகாப்பாக உணர்வார்கள். அப்படிப்பட்ட மாமனிதரின் மறைவுக்கு அஞ்சலிகள்” எனப் பேசியுள்ளார்.


‘நமது இதயங்களில் கேப்டன் அடக்கம் செய்யப்படுவார்’


தொடர்ந்து பேசிய நடிகர் பார்த்திபன், “ மரணம் எல்லாருக்கும் வரும். ஆனால் அது இப்படி தான் வரணும். ஒரு மரணத்தின்போது தான் ஒரு மனிதன் எப்படி வாழ்ந்தான் என்பதற்கான அவ்வளவு அடையாளங்களும் இருக்கும். எனக்கு தெரிஞ்சு ஒவ்வொரு நடிகருக்கும் இருக்கும் ரசிகர்கள் மாறுபாடுவார்கள். ஒருவரின் நடிப்பை ரசிப்பார்கள். ஒரு நடிகரின் அறிவை ரசிப்பார்கள். ஆனால் விஜயகாந்த் சாரின் ரசிகர்கள் அவரது மனிதாபிமானத்துக்கு மட்டுமே ரசிகர்களாக இருப்பார்கள். அந்த வகையில் நான் அவருக்கு தீவிர ரசிகர். விஜயகாந்த் சார் நம் இதயங்களுக்குள் தான் இன்று அடக்கம் செய்யப்பட உள்ளார். அதனால் அவர் நம்மை பிரிந்துவிடவில்லை. அவர் உடலளவில் பிரிந்து நம் மனதுக்குள் வர உள்ளார்.


நாம் செய்ய வேண்டிய ஒரே காரியம் அஞ்சலி செலுத்துகிறோம் என இன்று ஒரு நாளுடன் விட்டுவிடாமல், அவர் செய்த விஷயங்களை செய்வோம்.


 சினிமாவுக்காக அவர் வாய்ப்பு தேடும்போது, ரோஹிணி லாட்ஜ் டிநகரில் அவர் இருந்தபோது, தனக்கு குறைவான வசதிகள் இருந்தபோதும் தனக்கு வரும் பெரிய கேரியரில் மற்றவருக்கு உணவு பறிமாறி விட்டு சாப்பிடுவார். என் முதல் படம் சைதாப்பேட்டையில் தொடங்கியபோது 4 மணிக்கு ஷூட்டிங் முடிந்து படுத்து 6 மணிக்கு வந்துவிட்டார். என் முதல் படத்துக்கு அவர் தான் கிளாப் அடித்து தொடங்கி வைத்த மனிதர். இதுபோல் எல்லாருடைய வாழ்க்கையிலும் அவர் இருக்கிறார். நான் அவரோட துணைவியாரிடம் கூட சொன்னேன். அவருடைய மனைவிங்கறத தாண்டி தாய் அப்படிங்கற இடத்துல இருந்திருக்காங்க. அதனால் தான் இந்த சோகம் இவ்வளவு லேட்டா நமக்கு வந்து இருக்கு.  மனித சக்தி அவ்வளவு தான். அவர் போல் நாம் மனிதநேய பணிகள் தொடரணும். அது தான் நாம் அவருக்கு செய்யும் அஞ்சலி” எனப் பேசியுள்ளார்