தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், அவர் தொடர்பான வீடியோ காட்சிகளை ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
அவர் நடித்த ரமணா படத்தில் ஊழல் செய்யும் அதிகாரிகளை எல்லாம் கொலை செய்துவிட்டு ஜெயிலில் இருக்கும் விஜயகாந்தை பார்க்க, முதலமைச்சராக இருக்கும் ரவிச்சந்திரன் செல்வார். அப்போது விஜயகாந்திடம், ‘எவ்வளவு பெரிய விஷயம் பண்ணிருக்க. உன்னை இப்படி பார்க்கவே கஷ்டமா இருக்கு. ஒரு மனுஷன் பிரியும் போது ஒரு தாய் அழுதா அவன் நல்ல மகன், பிள்ளைங்க அழுதா அவன் நல்ல தகப்பன், அவன் கூட பொறந்தவங்க அழுதா நல்ல சகோதரன்.. அவன் பிரிவுக்காக நாடே அழுதா அவன் நல்ல தலைவன்.. உனக்காக இந்த நாடே அழுவுதப்பா” என ரவிச்சந்திரன் சொல்லும் காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
இதேபோல் விஜயகாந்தை அடையாளம் காட்ட சொல்லி, இளைஞர்களை ஜெயிலில் கட்டி வைத்து போலீசார் கடுமையாக அடிப்பார்கள். ஆனால் யாருமே காட்டி கொடுக்க மாட்டார்கள். அப்போது காவலதிகாரியாக இருக்கும் வடநாட்டைச் சேந்தவர், தமிழர்களை செண்டிமெண்டல் இடியட்ஸ் என விமர்சிப்பார். அதற்கு பதிலளிக்கும் யூகிசேது, ‘நாங்கள் செண்டிமெண்டல் இடியட்ஸ் இல்லை. தமிழ்நாட்டு மக்கள் அவ்ளோ சீக்கிரம் யார் மேலயும் அன்பு வச்சிற மாட்டாங்க அப்படி வச்சிட்டா சாகுற வரைக்கும் அந்த அன்பு மாறவே மாறாது. அந்த அன்பை தவறா பயன்படுத்திய தலைவர்கள் இருக்கிறார்கள்.
ஆனால் தலைவனை ஏமாற்றிய தொண்டர்கள் இல்லை’ என கூறுவார்.
இதனைக் கேட்டு அந்த வடநாட்டைச் சேர்ந்த உயரதிகாரி, ‘யாருய்யா அவன். எனக்கே பார்க்கணும் போல இருக்கு’ என தெரிவிக்கும் காட்சிகளை வைரலாக்கி வருகின்றனர். “நீங்கள் மறைந்தாலும் உங்கள் பேச்சுக்கள், படங்கள், பாடல்கள் மூலம் என்றும் மக்கள் மனதில் வாழுவீங்க கேப்டன்” என கண்கலங்கியபடி பதிவிட்டு வருகின்றனர்.