The Goat Vijay: விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான 5 படங்களின் வசூல் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
தி கோட் திரைப்படம்:
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் பிரமாண்ட பொருட்செலவில் தி கோட் திரைப்படம் உருவாகியுள்ளது. eஎஜிஎஸ் நிறுவனம் சார்பில் சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள, இப்படம் 80 சதவிகிதம் ஆக்ஷன் காட்சிகளால் நிரம்பியுள்ளதாக கூறப்படுகிறது. தி கோட் திரைப்படம் டிக்கெட் முன்பதிவு மூலம் மட்டுமே, ஏற்கனவே சுமார் 15 முதல் 20 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் முதல் நாளிலேயே சுமார் 40 கோடி ரூபாய் வரை இந்த படம் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், முதல் வார இறுதிக்குள் 100 கோடி ரூபாய் வசூலை கடக்கும் எனவும் கூறப்படுகிறது. உச்சபட்சமாக, விஜய் திரைப்பட வரலாற்றில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை எட்டும் எனவும் திரைத்துறைய்னர் கணிக்கின்றனர். இந்நிலையில், விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான 5 படங்களின் வசூல் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
5. லியோ:
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான திரைப்படம் லியோ. எல்சியு என்ற ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த சினிமாடிக் யூனிவெஸில் இணைந்ததால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு நிலவியது. ஆனால் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது. சுமார் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம், சுமார் 620 கோடி ரூபாய் வரை (விக்கிபீடியா தரவுகள்)வசூலித்ததாக கூறப்படுகிறது.
4. வாரிசு:
வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான திரைப்படம் வாரிசு. குடும்ப ரசிகர்களை கவரும் வகையில் உருவான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூல் ரீதியாக செக்கை போடு போட்டது. 200 கோடி ரூபாய்க்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவான இப்படம், சுமார் 300 கோடி ரூபாய் வரை வசூல் ஈட்டியதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
3. பீஸ்ட்:
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டு, கோடை விடுமுறைக்கு வெளியான திரைப்படம் பீஸ்ட். ஒரு ஹைஜாக் சம்பவத்தை மையாக கொண்டு, ஆக்ஷன் படமாக உருவானது. எதிர்பார்ப்புகள் உச்சத்தில் இருந்தாலும், இப்படம் ரசிகர்களை வெகுவாக கவரவில்லை. ஆனாலும், விஜய் என்ற பெயருக்காக இப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. சுமார் 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம், 300 கோடி ரூபாய் வரை வசூலித்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன.
2. மாஸ்டர்:
விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் முதல்முறையாக உருவான திரைப்படம் மாஸ்டர். கொரோனா தொற்று காரணமாக வீட்டில் முடங்கியிருந்த மக்களை, மீண்டும் திரையரங்குகள் பக்கம் ஈர்த்த பெருமை இப்படத்தையே சேரும். ஏகோபித்த வரவேற்பை பெற்ற இந்த ஆக்ஷன் திரைப்படம், 135 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி சுமார் 300 கோடி ரூபாயை ஈட்டியதாக கூறப்படுகிறது.
1. பிகில்:
ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியான திரைப்படம் பிகில். அட்லீ இயக்கத்தில் மகளிர் கால்பந்தாட்ட போட்டியை மையமாக கொண்டு உருவான இப்படம், ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. சுமார் 180 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம், 300 கோடி ரூபாய் வரை வசூல் ஈட்டியது. இந்த வெற்றியை தொடர்ந்தே, விஜய் இரண்டாவது முறையாக ஏஜிஎஸ் நிறுவனத்துடன் தி கோட் படம் மூலம் இணைந்துள்ளார்.