Leo Trailer: விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகிறது.


எதிர்பார்ப்பில் லியோ:


மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய்-லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ. அக்டோபர் 19ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தில் சஞ்சய் தத், திரிஷா, அர்ஜுன், மிஷ்கின் மற்றும் கவுதம் மேனன் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. விஜயின் படம் என்பதையும் தாண்டி,  லோகேஷின் எல்.சி.யு படங்களுடன் லியோ இணையும் என கூறப்படுவதால், இதன் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், இந்த படம் தொடர்பான ஒவ்வொரு அறிவிப்பும்  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


லியோ திரைப்பட டிரெய்லர்:


இதனிடயே, படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மாதம் 30ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. அதில் விஜய் பங்கேற்று, வழக்கம்போல குட்டிக் கதை சொல்வார் என அவரது ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால், பல்வேறு காரணங்களால் அந்த விழா கடைசி நேரத்தில் ரத்தானது. இதனால், இதனால் லியோ படத்தின் டிரெய்லரை தான் விஜய் ரசிகர்கள் உட்பட ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமே எதிர்நோக்கி உள்ளது. இந்நிலையில், படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானது முதலே லியோ டிரெய்லர் என்ற ஹேஷ்டேக் கடந்த இரண்டு நாட்களாக டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.


உசுப்பேத்தும் படக்குழு:


அதோடு, படக்குழுவினர் அவ்வப்போது லியோ திரைப்படம் மற்றும் டிரெய்லர் தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். டிரெய்லரை பார்த்து முடிக்கும்போது ரசிகர்களின் தாவாம்பட்டை தரையில் இருக்கும் என, படத்தின் வசனகர்த்த ஒருவர் கூற நாள் முழுவதும் அது டிரெண்டானது. இதனிடையே, படத்தை பார்த்த தணிக்கை குழு அதற்கு U/A சான்றிதழ் வழங்கியதை படக்குழு அறிவித்தது. அதனை பகிர்ந்த இசையமைப்பாளர் நாளை சம்பவம் உறுதி என கூற, விஜய் ரசிகர்கள் அதையும் கொண்டாடி வருகின்றனர். இவ்வாறு லியோ படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாக, அதன் டிரெய்லர் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பு நிலவுகிறது.  ஏற்கனவே வெளியான டைட்டில் டீசர், ஆண்டனி, ஹரோல்ட் தாஸ் கிளிம்ப்ஸ், நா ரெடி தான் மற்றும் பேட்-ஆஸ் ஆகிய பாடல்கள் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பு பெற்றது. அவற்றை காட்டிலும் லியோ திரைப்படத்திற்கு பிரமாண்ட எதிர்பார்ப்பு நிலவுவது குறிப்பிடத்தக்கது.


இதுவரை இல்லாத வியாபாரம்:


விஜயின் ஊதியம் 125 கோடி ரூபாய் ஊதியம் உட்பட சுமார், 200 கோடிக்கும் அதிகமான செலவில் லியோ திரைப்படம் உருவாகியுள்ளது. அதேநேரம், ரிலீசுக்கு முன்பே விநியோகம்,  ஒடிடி  மற்றும் இசை உரிமை உள்ளிட்டவற்றின் மூலம் ரூ.400 கோடி வரையில் வியாபாரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம், விஜயின் திரைப்படங்களில் எந்தவொரு படமும் நிகழ்த்தாத வியாபாரத்தை லியோ திரைப்படம் எட்டியுள்ளது. வெளிநாடுகளில் ஏற்கனவே படத்திற்கான முன்பதிவு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால், படத்தின் வசூலும் புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.