தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமான நடிகர் விஜய் நடிப்பில் சில தினங்களுக்கு முன்னர் வெளியான 'லியோ' படம் வெற்றி நடை போட்டு வருகிறது. வெளியான 6 நாட்களில் சுமார் 400 கோடி வரை வசூலித்து சாதனை படைத்து வருகிறது. அதனை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் விஜய் நடித்து வருகிறார். உலகெங்கிலும் லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ள விஜய் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரையும் கவர்ந்துள்ளார்.

தளபதி என தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் அடுத்ததாக ஹீரோவாக என்ட்ரி கொடுத்து ஒரு கலக்கு கலக்குவார் என எதிர்பார்த்தால் அவரின் ஆர்வம் எல்லாம் முழுக்க முழுக்க இயக்குநராக வேண்டும் என்பதிலேயே இருக்கிறது.


 




பாராட்டை அள்ளிய ஷார்ட் பிலிம் 


விஜய் நடித்த போக்கிரி மற்றும் வேட்டைக்காரன் படங்களின் பாடல்களில் ஒரு காட்சியில் மட்டும் தந்தையுடன் வந்து நடனமாடி கலக்கியிருந்தார் சஞ்சய். விஜய் - சங்கீதா தம்பதிகளின் மூத்த மகன் ஜேசன் சஞ்சய் கேனடாவில் உள்ள திரைப்பட கல்லூரியில் படித்து வருகிறார். சமீபத்தில் "புல் தி ட்ரிக்கர்" என்ற ஷார்ட் பிலிம் ஒன்றை இயக்கியிருந்தார். அப்படத்தின் காட்சிகள் அனைத்தும் மிகவும் தத்ரூபமாக திறமையான அனுபவமிக்க இயக்குனர்களின் கைவண்ணத்தில் உருவானது போல இருந்தது என பலரும் கருத்து தெரிவித்து பாராட்டினர்.


லைகாவுடன் இணையும் சஞ்சய் :


அதனை தெடர்ந்து ஜேசன் சஞ்சய்க்கு அருமையான வாய்ப்பு ஒன்று தேடி வந்துள்ளது. மிகவும் பிரபலமான திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் தயாரிப்பில் பிரமாண்ட திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்கு  காரணம் விஜய் தான் என ஒரு சிலரும் லண்டனில் மிக பெரிய தொழிலதிபராக இருக்கும் சங்கீதாவின் அப்பா தான் என்றும் தகவல்கள் பரிமாறப்பட்டு வரும் நிலையில் சஞ்சயின் இந்த இயக்குநர் ஆசையை விதைத்தவர் யார் என்ற உண்மையை தனது யூடியூப் சேனல் மூலம் தெரிவித்துள்ளார் சித்ரா லட்சுமணன்.


 




சங்கீதாவின் ஆசை :

மகனை இயக்குநராக அழகு பார்க்க வேண்டும் என ஆசை பட்டவர் விஜயின் மனைவி சங்கீதா தான். அதனால் அவர் தான் லைகா நிறுவனத்திடம் பேசி இந்த வாய்ப்பை சஞ்சய்க்கு பெற்று தந்துள்ளார் என்று சித்ரா லட்சுமணன் தனது யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார். ஜேசன் சஞ்சய் இயக்கப்போகும் இப்படத்தில்  யார் யார் நடிக்க போகிறார்கள்? என்ன வகையான படம்?  போன்ற எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜேசன் சஞ்சய், சுபாஷ்கரன் உடன் எடுத்து கொண்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. தாத்தா எஸ்.ஏ. சந்திரசேகர் வழியில் பேரன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாவது அவரின் ரசிகர்களுக்கும் சந்தோஷத்தை கொடுத்துள்ளது.