தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரமாக எங்கோ ஒரு மூளையில் பார்க்கப்பட்ட சில முகங்களுக்கு வாய்ப்பு கொடுத்தால், அவர்கள் எந்த அளவுக்கு அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு அவர்களின் அடையாளத்தை அப்படியே பன்மடங்கு உயர்த்திக் கொள்ள முடியும் என்பதற்கு சிறந்த உதாரணம், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி!
சாதாரண லுக் :
ஒரு ஆக்ஷன் ஹீரோவாக, அதிரடி காட்சிகளில் அதகளம் செய்யாமல் அமைதியாய், யதார்த்தமாய், நம்ம வீட்டு பையன் என்ற லுக்கில் மக்கள் மனதை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்ரமித்தவர் விஜய் சேதுபதி. 'தென்மேற்கு பருவக்காற்று' திரைப்படம் மூலம் ஒரு கிராமத்துக்கு கதாநாயகனாக விஜய் சேதுபதிக்கு அடையாளத்தை பெற்றுக் கொடுத்தவர் இயக்குநர் சீனு ராமசாமி.
அப்படி ஆரம்பித்த பயணம் மெல்ல மெல்ல சூடு பிடித்தது. இன்று அவர் திரை ரசிகர்களால் மக்கள் செல்வன் என கொண்டாடப்படும் அளவுக்கு தனது அந்தஸ்தை உயர்த்திக் கொண்டுள்ளார். ஆனால் பல இன்னல்களையும் சங்கடங்களையும் கடந்தே அவர் இந்த நிலையை அடைந்துள்ளார்.
மிரட்டலான வில்லன் :
ஒரு ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என விடாப்பிடியாக இருக்கும் ஒரு சில நடிகர்களுக்கு மத்தியில் எந்த சவாலான கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை அசால்ட்டாக செய்துவிட கூடிய திறமையான நடிகன். சமீப காலமாக நெகடிவ் கதாபாத்திரங்களை தேர்வு செய்து கலக்கி வரும் விஜய் சேதுபதி, தமிழ் சினிமா மட்டுமின்றி பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்து மிரட்டலான ஒரு வில்லனாக அதகளம் செய்து வருகிறார். இந்த மாஸ் நடிகர் இன்று தனது 46ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
விஜய் சேதுபதியின் பிறந்தநாளான இன்று அவரின் சொத்து மதிப்பு குறித்த விவரத்தைத் தெரிந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள்.
ஒரு படத்தின் சம்பளம் :
ஒரு படத்தில் நடிக்க ரூ.15 கோடி வரை விஜய் சேதுபதி சம்பளமாகப் பெறுவதாக கூறப்படும் நிலையில் சமீபத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக 'ஜவான்’ படத்தில் நடித்ததற்காக ரூ. 21 கோடி ரூபாய் பெற்றார் எனக் கூறப்படுகிறது. பல விளம்பரங்களுக்கு பிராண்ட் அம்பாசிடராக இருப்பதற்கு ரூ.50 லட்சம் வரை வசூலிப்பதாக சொல்லப்படுகிறது.
இத்தனை வீடுகளா?
வட சென்னை, கீழ்ப்பாக்கம் மற்றும் எண்ணூரில் சொந்தமாக வீடுகள் உள்ளன என்றும், அது தவிர தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும் அவருக்கு சொந்தமாக பல வீடுகளை வாங்கியுள்ளார் எனவும் கூறப்படுகிறது. அதிலும் வட சென்னையில் உள்ள அவரது பங்களாவின் மதிப்பு ரூ.50 கோடி இருக்குமாம்.
சொகுசு கார்கள் :
இது தவிர ஏராளமான சொகுசு கார்களை வைத்துள்ளார் விஜய் சேதுபதி. பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், மினி கூப்பர், டொயோட்டா பார்ச்சுனர் மற்றும் இன்னோவா கார்களையும் வைத்துள்ளார் எனக் கூறப்படுகிறது. எனவே அவரின் நிகர சொத்து மதிப்பு ரூ.140 கோடி இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.
சமீபத்தில் தான் விஜய் சேதுபதி - கத்ரீனா கைஃப் நடித்த மெரி கிறிஸ்மஸ் படம் வெளியானது. அதைத் தொடர்ந்து காந்தி டாக்ஸ், மகாராஜா, விடுதலை 2 , பிசாசு 2 , ட்ரெயின், இடம் பொருள் ஏவல் உள்ளிட்ட பல படங்கள் இந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியாக உள்ளன. இந்த ஆண்டும் அவருக்கு மிக சிறப்பான ஒரு ஆண்டாக அமையப் போகிறது. பிறந்தநாள் வாழ்த்துகள் விஜய் சேதுபதி!