விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் சைலண்ட் படம் குறித்தான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
விஜய்சேதுபதி நடிப்பில் பிரபல மராத்தி இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர் என்பவரது இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘காந்தி டாக்ஸ்’. முழுக்க முழுக்க வசனமில்லாத மெளனப்படமாக உருவாகி வரும் இந்தப்படத்தில் நடிகர் விஜய்சேதுபதி, அதிதிராவ் ஹைத்ரி, அரவிந்த் சாமி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
டார்க் காமெடி படமாக உருவாகி வரும் இந்தப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து உள்ளார். ஜீ ஸ்டியோஸ் தயாரித்துள்ள படமானது அடுத்தவருடம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தப்படத்தில் இருந்து கிளிம்ஸ் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர் பேசும் போது, “ சைலண்ட் படம் என்பது ஒரு வித்தை இல்லை. அது கதை சொல்லலின் ஒரு வடிவம். எமோஷனை வசனமில்லாமல் கடத்துவது என்பது பயமுறுத்தும் விஷயம் அல்ல. மாறாக அது சுவாரசியமும், சவாலும் நிறைந்தது” என்று கூறினார்.
தென்மேற்கு பருவக்காற்று படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் நடிகர் விஜய்சேதுபதி. தொடர்ந்து ‘பீட்சா’, ‘ நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ ‘சூது கவ்வும்’, ‘பண்ணையாரும் பத்மினியும்’ ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலக்குமாரா’ என வெவ்வேறு ஜானர்களில் நடித்து கவனம் ஈர்த்த விஜய்சேதுபதி ‘காதலும் கடந்து போகும்’, ‘சேதுபதி’ ‘ஆண்டவன் கட்டளை’ என பல படங்களில் நடித்து தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்தார்.
அதன் பின்னர் தன்னை அறிமுகப்படுத்திய சீனுராமி இயக்கத்தில் மீண்டும் ‘தர்மதுரை’ படத்தில் இணைந்த அவர் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் ‘விக்ரம் வேதா’ படத்தில் நடித்தார். இந்தப்படம் இரண்டு படங்களும் மிகப்பெரிய ஹிட் அடித்தது. தொடர் வெற்றிகளின் மூலமாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக மாறிய விஜய்சேதுபதிக்கு அதன் பின்னர் வெளிவந்த ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’, ‘ஜூங்கா’ உள்ளிட்ட சில படங்கள் தோல்வியை தழுவின.
அதன்பின்னர் அவரது நடிப்பில் வெளியான ‘செக்க சிவந்த வானம்’ ‘96’ ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என படங்கள் கைக்கொடுத்தன. இதற்கிடையே பிற மொழிகளிலும் கவனம் செலுத்திய விஜய்சேதுபதி தெலுங்கில் ‘சைரா நரசிம்ம ரெட்டி’ ‘உப்பென்னா' உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
தொடர்ந்து வில்லன் அவதாரம் எடுத்த விஜய் சேதுபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’, ரஜினியின் ‘பேட்ட’, கமல் நடித்த ‘விக்ரம்’ உள்ளிட்ட படங்களில் வில்லனாகவும் நடித்தார். அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.