மகாராஜா


விஜய் சேதுபதி தனது 50ஆவது படத்திற்கான ப்ரோமோஷன்களில் பிஸியாக இருக்கிறார். குரங்கு பொம்மை படத்தை இயக்கி கவனமீர்த்த நிதிலன் ஸ்வாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் 50ஆவது படமாக உருவாகியுள்ளது மகாராஜா (Maharaja). இப்படத்தில் அனுராக் கஷ்யப், மம்தா மோகன் தாஸ், முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், ஏ.ஏல் தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இருவரும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார்கள். வரும் ஜூன் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. மகாராஜா படத்தை ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து வரும் நிலையில், மலையாளத்தில் மம்மூட்டியுடன் விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் தகவல் வெளியாகி சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது.


டர்போ


மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகியுள்ள இரண்டாவது படம் டர்போ. வைசாக் இயக்கத்தில் ஆக்‌ஷன் த்ரில்லராக உருவான இப்படம், கடந்த மே மாதம் வெளியானது. திரைக்கதையைப் பொறுத்தவரை வழக்கமான ஆக்‌ஷன் படங்களுக்கான பாணியை பின்பற்றி இருந்தாலும், மம்மூட்டி ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடித் தீர்த்தார்கள். கன்னட நடிகர் ராஜ் பி ஷெட்டி இப்படத்தில் முக்கிய வில்லனாக நடித்திருந்தார். இந்த வில்லனை ஒழித்துக்கட்டி கடைசியில் படம் முடியும் தருணத்தில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தனர் டர்போ படக்குழுவினர்.


வில்லனுக்கு எல்லாம் வில்லன் வில்லாதி வில்லன் என்பது போல் விஜய் சேதுபதியின் குரல் பயண்படுத்தப்பட்டிருந்தது. இந்த ட்விஸ்ட் சமீபத்தில் டர்போ படக்குழுவினரால் வெளியிடப்பட்டது. டர்போ படம் வசூல் ரீதியா ரூ.50 கோடிக்கும் மேலாக வசூல் செய்துள்ள நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. முந்தைய பாகத்தில் தெரிவித்தது போல் விஜய் சேதுபதி தான் இந்தப் படத்தின் முக்கிய வில்லனாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.