மளமளவென திரைப்படங்கள் நடித்து மாதம் ஒருமுறை வெளியிடும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு கோரானா பெருந்தொற்று காலத்தில் வேளியாகாமல் பல திரைப்படங்கள் தேங்கி நின்றுகொண்டிருக்கின்றன. அதில் ஒன்று டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கிய 'துக்ளக் தர்பார்'. இத்திரைப்படத்தை நெட்ஃப்ளிக்ஸ் OTT தளம் வாங்கியுள்ளது. நேரடியாக OTT தளத்தில் வெளியாகும் இத்திரைப்படத்தின் ட்ரைலர் ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாகுமென நெட்ஃப்ளிக்ஸ் அறிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக வெளியான டீசரில் சீமானின் நாம் தமிழர் கட்சி கொடியின் நிறம் பயன்படுத்தப்பட்டிருப்பதாக சர்ச்சைகள் எழுந்தன. அதில் வில்லனாக நடிக்கும் பார்த்திபன் பெயரும் ராசிமான் என்று வைத்திருந்தார்கள். அப்போது நாம் தமிழர் கட்சி பிரமுகர்கள் திரைப்படத்தை கடுமையாக எதிர்த்தனர். திரைப்படக் குழு, இது உள்நோக்கத்துடன் செய்யப்பட்டது அல்ல, தெரியாமல் நடந்ததென்று விளக்கம் அளித்தனர். விஜய் சேதுபதியும் அதனை கவனிக்கவில்லை என்று கூறியிருந்தார். ஆனால் சீமானோ அது குறித்த கேள்விகளை லாவகமாக எதிர்கொண்டார். அது குறித்து பேசி திரைப்படத்துக்கு விளம்பரம் தர விரும்பாமல், திரைப்படம் மூலம் தனக்கு விளம்பரமாக இருக்கட்டும் என்று எளிதாக எதிர்கொண்டார். அதனால் திரைப்படத்திற்கு வழக்குகள் எதையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை வரவில்லை.
தற்போது அந்த திரைப்படம் OTT தளத்தில் வெளியாக தயாராக உள்ளது. அந்த திரைபடத்தின் இரண்டாவது பாடலான 'காமி காமி' நான்கு நாட்களுக்கு முன்பு வெளியாகியது. முன்னதாக வெளியான 'அண்ணாத்த சேதி' பாடலும் ஹிட் ஆகியிருந்தது. இப்படத்திற்கு '96' புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இது பொலிட்டிக்கல் த்ரில்லர் திரைப்படமாக தயாராகி இருக்கிறது. லலித் குமார் தயாரித்துள்ள இத்திரைப்படத்தில் ராஷி கண்ணா கதாநாயகியாக நடிக்கிறார். ஆரம்பத்தில் இந்த கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக இருந்த அதிதி ராவ் ஹைதரி, வேறு வேறு படங்களில் கமிட் ஆனதால் ராஷி கண்ணாவுக்கு கிடைத்தது. சங்கத்தமிழனுக்கு பிறகு ராஷி கண்ணா விஜய் சேதுபதியோடு இணைந்து நடிக்கும் இரண்டாவது திரைப்படம் இதுவாகும்.
அதே நேரத்தில் விஜய் சேதுபதியின் கைகளில் வழக்கம் போல டஜன் கணக்குகளில் திரைப்படங்கள் இருந்தாலும், வெளியீட்டுக்கு தயாராகவே ஐந்தாறு திரைப்படங்கள் உள்ளன. சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' திரைப்படத்தின் ஷூட்டிங்கை முடித்த விஜய் சேதுபதி, தற்போது கமலுடய விக்ரம் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். அத்துடன் மாஸ்டர் செஃப் தமிழ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குவதால் நிற்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறார். அவர் நடிப்பில் 'காக்க முட்டை' மணிகண்டன் இயக்கிய கடைசி விவசாயி, இடம் பொருள் ஏவல், லாபம், மாமனிதன் ஆகிய திரைப்படங்கள் வெளியீட்டுக்கு காத்திருக்கின்றன. இதில் கடைசி விவசாயி சோனி லிவ்வில் வெளியாகுமென அறிவிக்கப் பட்டுள்ளது. தியேட்டர் வேறு திறக்கப்பட்டுவிட்டதால், மற்ற திரைப்படங்கள் எத்தனை தியேட்டரில் வரப்போகிறது, எத்தனை OTT தளத்தில் நேரடியாக வெளிவரப்போகிறத்திய என்பதை காத்திருந்து பார்க்கலாம்.