சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில் 20ஆவது சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. இதில் பல திரைப்படங்கள், இயக்குனர்கள் மற்றும் நடிகர்களுக்கு பல்வேறு வகையான விருதுகள் வழங்கப்பட்டன. ‘மக்கள் செல்வன்’ என்றழைக்கப்படும் விஜய் சேதுபதிக்கும், மாமனிதன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது. 




விஜய் சேதுபதிக்கு விருது:


சீனு ராமசாமி இயக்கத்தில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளிவந்த ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பை பெற்ற படம், மாமனிதன். இப்படத்தில், ஹீரோவாக நடித்த விஜய் சேதுபதியின் நடிப்பை பலரும் பாராட்டினர். தற்போது நடைபெற்று வந்த 20ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் விஜய் சேதுபத்திக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. அந்த விருதை பெற்றுக்கொண்ட அவர், ரசிகர்களிடம் ஒரு கோரிக்கை வைத்தார். 


ரசிகர்களிடம் கோரிக்கை!


கையில் விருது பெற்ற நடிகர் விஜய் சேதுபதி பேசுகையில்,“வாழ்க்கையின் அனுபவங்கள் திரைப்படங்களாக மாறி வருகின்றன. ஒரு திரைப்படத்தை முடிந்தளவு புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். எல்லோரும் சிறந்த படங்களை எடுத்து வருகின்றனர். ஒரு திரைப்படத்தின் மூலம், ஒரு மனிதனின் வாழ்க்கை கதையை இரண்டரை மணி நேரத்தில் சொல்லிவிட முடியும்" என்றார். தொடர்ந்து பேசிய அவர், “எந்தவொரு திரைப்படத்தையும் விமர்சனங்கள் வாயிலாக பார்க்கவேண்டாம்” என ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்தார். 


பரிசுத் தொகையை பரிசளித்து விஜய் சேதுபதி..


விஜய் சேதுபதிக்கு சிறந்த நடிகருக்கான விருது அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து,அவருக்கு குறிப்பிட்ட பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. அந்த பரிசுத் தொகையை, சென்னை இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் கமிட்டிக்கு நன்கொடையாக அளிப்பதாக கூறினார்; மாமனிதன் படத்திற்காக விருது வழங்கப்பட்டது மகிழ்ச்சி என குறிப்பிட்ட விஜய் சேதுபதி, இந்த ஆண்டு விரைவில் முடிவு பெற இருப்பதாகவும், அடுத்த ஆண்டை அனைவரும் புதிதாக தொடங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்தார். 


இரவின் நிழல் படத்திற்கு இரண்டு விருது


பார்த்திபன் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி சில சர்ச்சைகளை ஏற்படுத்திய இரவின் நிழல் படத்திற்கும் இரண்டு விருதுகள் கிடைத்துள்ளது. இரவின் நிழல் படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது, நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபனுக்கு கிடைத்தது. ஸ்பெஷல் ஜூரி விருதும்(Special Jury Award) இரவின் நிழல் படத்திற்காக வழங்கப்பட்டது. 




நடிகர் பார்த்திபன் இரவின் நிழல் படத்திற்கான இரண்டு விருதுகளையும் பெற்றுக்கொண்டார். அப்போது பேசிய அவர், “எனக்கு கிடைத்துள்ள இந்த விருது, என்னை பெற்ற தாய்க்கும் நான் பெற்ற குழந்தைக்கும் சமம்” என்றார். 


நிறைவு விழாவில் கலந்து கொண்டவர்கள்


சத்யம் திரையரங்கில், ஒரு வார காலமாக நடைப்பெற்று வந்த 20ஆவது சர்வதேச திரைப்படத் திருவிழா நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த விழாவில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட்டுள்ளன.  இதில், பாக்கியராஜ், விஜய் சேதுபதி, பார்த்திபன், உள்ளிட்ட பல நடிகர்கள் கலந்து கொண்டனர். இதில், நடிகர் மற்றும் இயக்குனர் பாரதி ராஜாவிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. 


விருது பெற்றவர்களின் விவரங்கள்


• சிறந்த நடிகைக்கான விருது-சாய் பல்லவி (கார்கி படம்)
• சிறந்த நடிகர்- விஜய் சேதுபதி(மாமனிதன்)
• சிறந்த திரைப்படம்-கிடா திரைப்படம்
• இரண்டாவது சிறந்த திரைப்படம்-கசடதபற (சிம்புதேவன்)
• சிறந்த ஒளிப்பதிவு-இரவின் நிழல் (பார்த்திபன்)
• சிறந்த ஒலிப்பதிவு-நட்சத்திரம் நகர்கிறது (ஆண்டனி ராபன்)
• சிறந்த படத்தொகுப்பு-பிகினிங்
• ஸ்பெஷல் ஜூரி விருது- இரவின் நிழல் (பார்த்திபன்)
• சிறப்பு விருது-ஆதார் திரைப்படம்