மகாராஜா
விஜய் சேதுபதியின் 50 ஆவது படமாக உருவாகியுள்ள மகாராஜா படம் கடந்த ஜூன் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. குரங்கு பொம்மை படத்தை இயக்கி கவனமீர்த்த நிதிலன் ஸ்வாமிநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார். படத்தில் அனுராக் கஷ்யப், மம்தா மோகந்தாஸ், பாரதிராஜா, அபிராமி, நட்டி, சிங்கம் புலி, பாய்ஸ் மணிகண்டன், அருள்தாஸ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். காந்தாரா படத்திற்கு இசையமைத்த அஜ்னீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.
மகாராஜா படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. விமர்சகர்களுக்கு இப்படத்தின் மேல் மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும் வெகுஜனத்தை கவரும் வகையில் இப்படத்தின் திரைக்கதை அமைந்துள்ளது படத்தின் பலம். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் இப்படத்திற்கு பாசிட்டிவான ஓப்பனிங் கிடைத்து வருகின்றன. முதல் வாரத்தில் மகாராஜா படம் உலகளவில் 50 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இதுகுறித்த அதிகாரப் பூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். இப்படியான நிலையில் மகாராஜா படத்தின் வெற்றிவிழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டு ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளார்கள். மகராஜா படத்தின் வெற்றி குறித்து படத்தின் இயக்குநர் நிதிலன் ஸ்வாமிநாதன் பேசியுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது.
ஒரு நாளைக்கு ஆயிரம் ஃபோன் வரும்
நிகழ்ச்சியில் பேசிய நிதிலன் ஸ்வாமிநாதன் ‘மகாராஜா படம் இவ்வளவு பெரிய வெற்றிபெற்றதற்கு காரணம் ரசிகர்களும் பத்திரிகையாளர்களும் தான். ஃபேஸ்புக் , ட்விட்டர் , வாட்ஸ் அப் மூலமாக இந்தப் படத்துக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மகாராஜா படம் வெளியானதில் இருந்து எனக்கு அத்தனை ஃபோன் கால் வருகிறது. ஒரு நாளைக்கு 1000 கால் வந்திருக்கும். இதற்கு தானே ஆசைப் பட்டாய் பாலகுமாரா என்று நானும் அதை எடுத்துக் கொண்டேன். இந்தப் படத்தில் ஒரு சிலருக்கு மாற்றுக் கருத்துக்கள் இருப்பதை நான் கவனித்தேன். அதில் எனக்கு உணமையாக படும் கருத்துக்களை நிச்சயம் நான் எடுத்துக் கொள்வேன் . என்னுடைய அடுத்தப் படங்களில் இந்த தவறுகளை திருத்திக் கொள்கிறேன் “ என்று அவர் கூறியுள்ளார்.
படப்பிடிப்பின் போது விஜய் சேதுபதி செய்த செயல்
தொடர்ந்து பேசிய அவர் “ விஜய் சேதுபதி ஒரு நல்ல நடிகர் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அவர் ஒரு நல்ல மனிதர் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் சொல்கிறேன். மகாராஜா படப்பிடிப்பின் போது தள்ளுவண்டியில் ஒருவர் பொம்மை விற்றுக் கொண்டு இருந்தார். கூறு ஐம்பது ரூபாய் என்று அந்த வியாபாரி ரெக்கார்டரில் கூவிக் கொண்டிருந்தார். அப்போது விஜய் சேதுபதி அந்த ரெக்கார்டரை வாங்கி கூறு ஐம்பது ரூபாய் என்று விற்கத் தொடங்கிவிட்டார். நான் அதை பார்த்து மிரண்டு போயிட்டேன். விஜய் சேதுபதி அதையே தனது வேலையாக செய்திருந்தால் அவருக்கு கோடி ரூபாய் சம்பளம் கிடைத்திருக்கும்” என்று நிதிலன் ஸ்வாமிநாதன் தெரிவித்துள்ளார்