தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி, இயக்குநர் மகிழ் திருமேனியுடன் படம் ஒன்றில் இணையவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் விஜய் சேதுபதி. மக்கள் செல்வன் என ரசிகர்களால் அழைக்கப்படும் அவர் தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகரானார். அந்த படம் தேசிய விருது பெற்ற நிலையில் விஜய் சேதுபதியும் கவனிக்கத்தக்க நடிகராக மாறினார். கடந்த 15 ஆண்டுகளில் 60க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் விஜய் சேதுபதி நடித்துள்ளார். 

மேலும் ரஜினி, கமல், விஜய், ஷாரூக்கான் ஆகியோருக்கு வில்லனாகவும் அசத்தினார்.  சினிமாவில் நடிகராக மட்டும் திகழாமல் தயாரிப்பாளர், பாடகர் என பல பரிணாமங்களை வெளிப்படுத்தினார். இப்போதுள்ள நடிகர்களில் குறுகிய காலத்தில் அதிகம் படம் நடித்தவர் என்ற பெருமை விஜய் சேதுபதியை சாரும் அளவுக்கு பிரபலமானார். நடப்பாண்டு மட்டும் விஜய் சேதுபதில் நடிப்பில் ஏஸ், தலைவன் தலைவி ஆகிய படங்கள் வெளியானது.

Continues below advertisement

அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெயின் என்ற படத்திலும், தெலுங்கில் இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்திலும் படம் நடித்து வருகிறார். இதற்கிடையில் விஜய் சேதுபதி சின்னத்திரையில் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். 

உருவாகும் அடுத்த கூட்டணி 

இப்படியான நிலையில் விஜய் சேதுபதி அடுத்ததாக முன்னணி இயக்குநர்களுடன் கைகோர்க்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அதில் ஒருவர் மணிரத்னம் என கூறப்படுகிறது. ஏற்கனவே மணி ரத்னம் அவரை வைத்து செக்க சிவந்த வானம் என்ற படத்தை இயக்கியிருந்தார். இதில் 4 ஹீரோக்களில் ஒருவராக விஜய் சேதுபதி நடித்திருந்தார். இந்த நிலையில் இவரை முன்னிலைப்படுத்தி படம் ஒன்றை இயக்க மணி ரத்னம் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 

அதேசமயம் அஜித்தை வைத்து விடா முயற்சி படம் எடுத்த மகிழ் திருமேனி இயக்கத்திலும் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ஹீரோயினாக பிரபல பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெறுகிறதாம். மும்பையைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று இப்படத்தை தயாரிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் நடிகர் சஞ்சய் தத் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முதற்கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ள நிலையில் இந்த படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் இந்தியில் உருவாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜவான், மேரி கிறிஸ்துமஸ் படம் மூலம் இந்தி சினிமா ரசிகர்களுக்கு விஜய் சேதுபதி நன்கு பரீட்சையமானவர் என்பதால் அவருக்கான ஸ்டார் வேல்யூ அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் ரசிகர்கள் இடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது.