திரை நட்சத்திரங்கள் அரசியலில் இணைவதும் புதிய அரசியல் கட்சி தொடங்குவதும் காலம் காலமாக நடைபெற்று வரும் ஒன்று தான். அந்த வகையில் தமிழ் திரையுலக ரசிகர்கள் நடிகர் விஜய் அரசியலில் இறங்க வேண்டும் என பல காலமாக ரசிகர்கள் காத்திருந்தனர். அவர்களின் ஆசைகளை நிறைவேற்றும் படி கடந்த பிப்ரவரி 2ம் தேதி ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற அரசியல் கட்சியை தொடங்கியதாக அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளிட்டார். அவரின் அரசியலில் பிரவேசம் செய்த இந்த ஒரு மாத காலத்தில் அவர் செயல்பாடுகள் என்னென்ன என்பதை பற்றி பார்க்கலாம்:
விஜய் அரசியலில் இறங்கியதும் தன்னுடைய முதல் அறிக்கை மூலம் பலருக்கும் இருந்த சந்தேகங்களுக்கு தெளிவாக பதில் அளித்து இருந்தார். மக்கள் சேவைக்காக அரசியலில் இறங்க முடிவெடுத்ததால் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள திரைப்படங்களை முடித்துவிட்டு முழுமையாக அரசியலில் இறங்குவேன் என்றும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவது தான் இலக்கு என தெரிவித்து இருந்தார்.
பின்னர் தன்னுடைய கட்சிப் பெயரில் இலக்கணப் பிழை இருப்பதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்த நிலையில் தமிழக வெற்றி‘க்’ கழகம் என்று அதிகாரபூர்வமாக திருத்தம் செய்தார். இக்கட்சியின் கொடி பெண்களை கவரும் வகையில் அமைக்க திட்டமிட்டுள்ளனர்.
கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் உட்கட்டமைப்பை வலுப்படுத்த, கட்சியில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதற்கு நவீன வசதிகளுடன் சிறப்பு செயலி உருவாக்கப்பட்டு அதன் மூலம் மட்டுமே உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் மூலம் தேர்ந்து எடுக்கப்படும் என்றும் யூகத்தின் அடிப்படையில் அல்லது விஷமத்தனமாக பரப்பப்படும் செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு அறிக்கை மூலம் தெரிவித்தனர்.
இதனிடையே நேற்று முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் 71வது பிறந்த நாளுக்கு கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கம் மூலம் முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். இதுவரையில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் எக்ஸ் தளத்தில் கட்சி சார்ந்த அறிவிப்புகள் மட்டுமே வெளியான நிலையில் முதல் முறையாக அரசியல் கட்சி தலைவருக்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்கியதால் தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு உற்சாகத்துடன் தேர்வுகளை எதிர் கொண்டு வெற்றி பெற்று விரும்பிய துறையில் உச்சம் தொட வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.
இப்படியாக தனி கட்சியை துவங்கிய ஒரே மாதத்தில் விஜய் அரசியலில் ஒவ்வொரு படியாக அடி எடுத்து வைத்து வருகிறார். சட்டமன்றத் தேர்தலில் களமிறங்க இன்னும் 2 ஆண்டுகள் இருக்கும் நிலையில் அதற்கு முன்பே கட்சியை தொடங்கி அதை வெளிப்படையாக அறிவித்து துணிச்சலாக செயல்பட்டு வருகிறார் விஜய். அதேசமயம் மக்கள் பிரச்சினையில் எதிலுமே தமிழக வெற்றிக்கழகம் முழுமையாக களமிறங்கவில்லை. கட்சியை வலுப்படுத்தும் பணி சென்று கொண்டிருப்பதால் விரைவில் அத்தகைய விமர்சனங்களுக்கு விஜய் முற்றுப்புள்ளி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.