உலக பட்டினி தினத்தையொட்டி தமிழ்நாடு முழுவதும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஒருவேளை உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள விஜய், தனது மக்கள் இயக்கம் சார்பில் மக்கள் நலத்திட்ட பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் அவரது ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு வாரமும், மக்களுக்கு பயன்படும் வகையிலான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே கடந்த மே 25 ஆம் தேதி விஜய் மக்கள் இயக்கம்(Vijay Makkal Iyakkam) சார்பில் அறிக்கை ஒன்று வெளியானது.


அதில், “மே-28 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) உலக பட்டினி தினம் அனுசரிக்கப்பட உள்ளது.  அன்று பகல் 11 மணியளவில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நகரம், ஒன்றியம் மற்றும் பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஒருவேளை (மதிய) உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் மதிய உணவுகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.  




அதன்படி இந்த திட்டத்தை  விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திருச்சியி தொடங்கி வைத்தார். மேலும் தமிழ்நாடு முழுவதும் விஜய் ரசிகர்கள், சாலையோரம் உள்ள ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விஜய் ரசிகர் மன்றத்தின் பல்வேறு பிரிவுகளை சார்ந்த ரசிகர்களால் செய்யப்பட்டிருந்தது.  விஜய் ரசிகர்களின் இந்த முன்னெடுப்பு பிற நடிகர்களின் ரசிகர்களிடத்திலும் பாராட்டைப் பெற்றுள்ளது. 


விஜய்யின் அடுத்தக்கட்ட திட்டம்? 


முன்னதாக சமீபகாலமாக நடிகர் விஜய்யின் ஒவ்வொரு நடவடிக்கையும் அவர் அரசியலில் களமிறங்க உள்ளதற்கான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது. அவருக்கு அரசியலில் ஆர்வம் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான் என்றாலும், அதற்கான தக்க சமயத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறார் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.


மேலும் சென்னையில் அடுத்த மாதம் பொதுக்கூட்டம் ஒன்றை விஜய் தலைமையில் நடத்த விஜய் மக்கள் இயக்கம் முடிவு செய்துள்ளதாகவும், இதுவே அவர் அரசியலில் களமிறங்குவதன் தொடக்கமாக அமையும் எனவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.  இதேபோல் லியோ படத்தின் ஆடியோ நிகழ்ச்சியையும் சென்னையில் நடத்தாமல் வெளிமாவட்டத்தில் நடத்தவும் விஜய் முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது. 





இது ஒருபுறமிருக்க 12 ஆம் மற்றும் 10ஆம் வகுப்பில் தொகுதி வாரியாக , அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் உதவி தொகைகளை  விஜய் வழங்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியிருந்தது. ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கத்தினர் ஊரக, உள்ளாட்சி தேர்தல்களிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். இப்படியான நிலையில் முன்பை விட விஜய் மக்கள் இயக்கம் மக்கள் நலப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவது ”தளபதி அரசியல்”-கான அச்சாரமாகவே பார்க்கப்படுகிறது.