2026 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டால் கணிசமான இடங்களில் வெற்றி பெறுவோம் என மக்கள் இயக்கத்தினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள விஜய், இன்று அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களுடன் சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். பனையூரில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு அனைவருடனும் அவர் தனித்தனியாக போட்டோ எடுத்துக் கொண்டார். இந்த கூட்டத்தில் விஜய், தனது அரசியல் வருகை குறித்து பேசியதாக கூறப்படுகிறது. முன்னதாக இந்த ஆலோசனைக் கூட்டம் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படியான நிலையில் ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் வெளியே வந்த மக்கள் இயக்க நிர்வாகிகள், உள்ளே என்ன நடந்தது என்பது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளனர். அதன்படி, “கண்டிப்பாக விஜய் வெளிப்படையாக அரசியல் செய்தால் எல்லா மக்களும் எங்களுடன் இணைவார்கள். இதேபோல் நாங்கள் பேசும்போது அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக சினிமாவில் நடிக்க மாட்டேன் என சொல்லியுள்ளார். முன்னதாக உள்ளாட்சி தேர்தலில் அவரின் முகத்தை மட்டுமே காட்டி பதிவு செய்யப்பட்ட 2 கட்சியை காட்டிலும் வெற்றி பெற்றோம்.
மேலும் விஜய் ரசிகர்கள் தவிர ரஜினி, அஜித் ரசிகர்கள் விஜய் அரசியல் வருகை குறித்து எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, சப்போர்ட் செய்கிறார்கள். அதேசமயம் விஜய்யும் உங்கள் வேலையை சரியாக பாருங்கள். எதையும் கண்டுக்க வேண்டாம் என சொன்னார். கண்டிப்பாக ஒருநாள் விஜய் முதலமைச்சர் சீட்டில் உட்காருவார். அதற்கு நாங்கள் போராடுவோம். அவர் ஏற்கனவே அரசியலில் பேஸ்மெண்ட் போட்டுவிட்டார்.விஜய் அரசியலுக்கு வரும் போது பில்டிங் (அரசியல்) உறுதியாக இருக்கும்.
மேலும் விஜய்யிடம், ‘நீங்கள் என்ன பண்ணினாலும் அது பெரிய அளவில் பேசப்படுகிறது. நீங்கள் அரசியலுக்கு வந்தால் இளைய தலைமுறைக்கு நல்ல மாற்றமா இருக்கும்’ என சொன்னோம். அதற்கு அவர் சின்னதாக ஒரு சிரிப்பை பதிலாக அளித்தார். ‘ஓகே நண்பா..பார்க்கலாம்..சொல்றேன்’ என சொன்னார். எந்த வகையான தேர்தலாக இருந்தாலும் விஜய் க்ரீன் சிக்னல் கொடுத்தால் எதிலும் போட்டியிட தயாராக உள்ளோம். மக்களும் ஏதாவது புதிதாக வவர வேண்டும் என நினைக்கிறார். அதில் விஜய்யை எல்லோரும் விரும்புகிறார்கள்.
மக்கள் இயக்கத்தினரை பொறுத்தவரை விஜய் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டால் நன்றாக இருக்கும் என நினைக்கிறோம். கண்டிப்பாக 2026 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டால் கணிசமான இடங்களில் வெற்றி பெறுவோம்” என மக்கள் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.