விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் வரும் ஜனவரி 9 ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது. கடந்த 3 ஆம் தேதி வெளியான படத்தின் டிரெய்லர் தமிழ் சினிமா வரலாற்றில் அதிகம் பார்க்கப்பட்ட டிரெய்லராக சாதனை படைத்துள்ளது. 

Continues below advertisement

விஜயின் திரையுலகின் கடைசி படமாக உருவாகியுள்ள ஜனநாயகன் படத்தை எச் வினோத் இயக்கியுள்ளார். கேவிஎன் ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே , மமிதா பைஜூ , பிரியாமணி , நாசர் , கெளதம் மேனன் , பிரகாஷ் ராஜ் , பாபி தியோல் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார்.  கடந்த ஜனவரி 3 ஆம் தேதி படத்தின் டிரெய்லர் வெளியாகி விஜய் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. விஜயின் கடைசி படம் என்பதால் அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இதனால் படம் வசூல் ரீதியாக பெரியளவில் சாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வசூல் ரீதியாக மட்டுமில்லாமல் படத்தின் இசை வெளியீடு , டிரெய்லர் என அனைத்தும் புதிய சாதனைகளை உருவாக்கி வருகின்றன

மலேசியாவில் சாதனை படைத்த இசை வெளியீடு

கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி ஜனநாயகன் படத்தின் இசை வெளியீடு மலேசியாவில் புகிட் ஜலால் மைதானத்தை பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதில் இருந்தும் 85 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் வந்திருந்தனர். மலேசியாவில் அதிக பார்வையாளர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியாக மலேசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம்பெற்றது இந்த நிகழ்ச்சி. 

Continues below advertisement

ரீமேக் என்றாலும் பரவாயில்லை

தெலுங்கில் பாலையா நடித்த பகவந்த் கேசரி படத்தின் பல காட்சிகள் இப்படத்தில் இடம்பெற்றிருப்பதை டிரெய்லரில் பார்க்க முடிந்தது. காட்சிகள் மட்டுமில்லாமல் வசனங்கள் கூட ஒரே போல் இருந்ததால் ஜனநாயகன் டிரெய்லர் விமர்சனங்களை எதிர்கொண்டது. ஆனால் விஜய் ரசிகர்களை பொறுத்தவரை படம் ரீமேக் படமாகவே இருந்தாலும் பரவாயில்லை என கூறி வருகிறார்கள். 

ஜனநாயகன் டிரெய்லர் சாதனை 

ஜனநாயகன் டிரெய்லர் வெளியான 24 மணி நேரத்தில் தமிழ் சினிமா வரலாற்றில் அதிகம் பார்வையாளர்களை கொண்ட டிரெய்லராக சாதனை படைத்துள்ளது. டிரெய்லர் வெளியான 24 மணி நேரத்தில் யூடியூபில் 52.7 மில்லியன் பார்வையாளர்களாலும் இன்ஸ்டாகிராமில் 31 மில்லியன் பார்வையாளர்களாலும் காணப்பட்டுள்ளது. சமூக வலைதளங்கள பார்வையாளர்களையும் சேர்த்து மொத்தமாக 24 மணி நேரத்தில் 83.7 மில்லியன் பார்வையாளர்கள் இந்த டிரெய்லரை பார்த்துள்ளார்கள். தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு படத்தின் டிரெய்லருக்கு இத்தனை பார்வையாளர்கள் கிடைத்திருப்பது இதுவே முதல் முறையாகும்.