விஜயின் ஜனநாயகன் படத்தின் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான முன்பதிவு சில நாட்கள் முன்பு தொடங்கியது. முன்பதிவுகள் தொடங்கிய ஒருசில நாட்களில் 13 ஆயிரம் டிக்கெட்கள் விற்பனையாகியுள்ளது. கூடிய விரைவில் விஜயின் லியோ படத்தின் வசூலை முந்த இருக்கிறது ஜனநாயகன் திரைப்படம்
ஜனநாயகன் படத்தோடு திரையுலகத்திற்கு குட்பை சொல்ல இருக்கிறார் நடிகர் விஜய். அவரது கடைசி படமாக உருவாகியுள்ள ஜனநாயகன் பொங்கலுக்கு ஜனவரி 9 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. விஜயின் கடைசி படம் என்பதால் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இதனிடையில் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீடு மலேசியாவில் அதிபிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. விஜயின் முந்தைய படங்களில் ஹிட் பாடல்களை பாடிய பாடகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இசை நிகழ்ச்சியும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
முன்பதிவுகள் தொடக்கம்
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஜனநாயகன் படத்திற்கான முன்பதிவுகள் கடந்த 19 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. அஹிம்சா என்டர்டெயின்மெண்ட் இப்படத்தை வெளியிடுகிறது. முன்பதிவுகள் தொடங்கிய 72 மணி நேரத்தில் படத்திற்கு 13 ஆயிரம் டிக்கெட்கள் விற்பனை ஆகியுள்ளதாகவும் , இதுவரை 3 கோடிக்கு மேல் முன்பதிவுகளில் வசூலாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்னும் டீசர் கூட வெளியாகாத நிலையில் படத்திற்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜயின் கரியரில் அதிக வசூல் ஈட்டும் படமாக இப்படம் இருக்கும் என சினிமா வர்த்தக குழு தெரிவிக்கின்றன.
ஜனநாயகன் படக்குழு , பட்ஜெட் , விஜய் சம்பளம்
கே.வி.என் ப்ரோடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை எச் வினோத் இயக்கியுள்ளார். பூஜா ஹெக்டே , மமிதா பைஜூ , பாபி தியோல், கெளதம் மேனன் , பிரியாமணி ஆகியோர் படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். சத்யன் சூர்யன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரதீப் ராகவ் படத்தொகுப்பை கையாண்டுள்ளார்.
சுமார் ரூ 400 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய்க்கு இப்படத்தில் அதிகப்படியாக ரூ 275 கோடி வரை சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
ஓடிடி மற்றும் சாட்டலைட் விற்பனை
ஜனநாயகன் படத்தின் சாட்டலை உரிமையை Zee தொலைக்காட்சி ரூ 64 கோடிக்கு வாங்கியுள்ளது. அனைத்து தென் மொழிகளிலும், பின் ஹிந்தியில் 8 வாரங்கள் கழித்து ஸ்ட்ரீமிங் செய்யும் வகையில் Amazon Prime Video நிறுவனம் ₹121 கோடிக்கு டிஜிட்டல் உரிமைகளைப் பெற்றுள்ளது.