விஜயின் ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி வரும் டிசம்பர் 27 ஆம் தேதி வரும் மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் அரசியல் தொடர்பான கருத்துக்களை மற்றும் கட்சிக் கொடிகளை சம்பந்தபடுத்தக் கூடாது என மலேசிய அரசு படக்குழு மற்றும் ரசிகர்களுக்கு கடுமையான விதிமுறைகள் விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் விஜயின் திரையுலக பயணத்தில் கடைசி படமாக உருவாகியுள்ளது ஜனநாயகன். கே.வி.என் ப்ரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை எச் வினோத் இயக்கியுள்ளார். விஜய் , பூஜா ஹெக்டே , பாபி தியோல் , மமிதா பைஜூ , பிரியாமணி , கெளதம் மேனன் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். வரும். ஜனவரி 9 ஆம் தேதி பொங்கல் பண்டிகைக்கு இப்படம் வெளியாக இருக்கிறது. ஜனநாயகன் படத்தின் இசை வெளியீடு நிகழ்ச்சி மலேசியாவில் மிக பிரம்மாண்டமாக டிசம்பர் 27 ஆம் தேதி நடைபெற உள்ளது
இரண்டு கட்டங்களாக நடைபெற போகும் ஜனநாயகன்
மலேசியா குவாலா லம்பூரில் உள்ள புகித் ஜலால் மைதானத்தில் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. விஜயின் கடைசி படம் என்பதால் இந்த படத்தை ஒட்டிய அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள பெரும் ஆர்வம் காட்டி வந்தனர். மலேசியாவில் படத்தின் இசை வெளியீடு நடைபெறுவது ரசிகர்களுக்கு ஒரு விதத்தில் அதிருப்தியை கொடுத்துள்ளது. கரூரில் விஜயின் அரசியல் பரப்புரையின் போது 41 பேர் உயிரிழந்தது விஜய்க்கு எதிராக நிறைய விமர்சனங்களை உண்டாக்கியது . பாதுகாப்பு காரணங்களுக்காகவும் அரசியல் நெருக்கடிகளை தவிர்ப்பதற்காகவும் மலேசியாவில் இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
இரண்டு கட்டங்களாக இந்த இசை வெளியீடு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. முதல் கட்டமாக 'தளபதி திருவிழா' என்கிற தலைப்பில் இசை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. நடிகர் ரியோ ராஜ் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார். விஜயின் முந்தைய பட பாடல்கள் இந்த நிகழ்ச்சியில் பாடகர்கள் பாட இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி முடிந்து அடுத்தபடியாக படத்தின் இசை வெளியீடு நடைபெறும்
மலேசிய அரசு விதித்த விதிமுறைகள்
ஜனநாயகன் படக்குழுவிற்கும் நிகழ்ச்சிக்கு வரும் விஜய் ரசிகர்களுக்கும் மலேசிய அரசு கண்டிப்பான விதிமுறைகள் விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க சினிமா சார்ந்த. பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மட்டுமே இருக்க வேண்டும். யாரும் அரசியல் பேசக்கூடாது. அதேபோல் ரசிகர்கள் தமிழக வெற்றிக் கழகம் தொடர்பான கட்சி கொடியோ , டீ ஷர்ட் அல்லது கட்சித் துண்டை அணிந்து வரக்கூடாது. மீறுபவர்கள் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சுமூகமான முறையில் இந்த நிகழ்ச்சி நடைபெற இந்த விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும் என மலேசிய அரசு தரப்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.