தளபதி 69 தான் விஜயின் கடைசி படமாக இருக்கும் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகிறார்கள்.
விஜய்யின் அரசியல் பிரவேசம்
நடிகர் விஜய் தான் அரசியலில், களமிறங்குவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழக வெற்றி கழகம் என்று தனது கட்சிக்கு பெயர் வைத்துள்ளார். நடிகர் விஜயின் (Vijay) விஜய் மக்கள் இயக்கத்தினை அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் இன்று பதிவு செய்துள்ளனர். விஜயின் தமிழக வெற்றிக் கழகம் (Tamizhaga Vetri kazhagam) வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பேட்டியிடப்போவதில்லை எனவும், யாருக்கும் ஆதரவில்லை எனவும் விஜய் தெளிவுபடுத்தியுள்ளார். அதே நேரத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாகவும், ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள படங்களில் மட்டும் நடித்துவிட்டு, முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சோகத்தில் விஜய் ரசிகர்கள்
ஒரு பக்கம் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தாலும் இனிமேல் தளபதி விஜயை திரையில் பார்க்க முடியாது என்கிற வருத்தம் அவர்களை சூழ்ந்துள்ளது. தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார் விஜய். இது விஜயின் 68-ஆவது படம். இதற்கு அடுத்ததாக தனது 69 படத்தில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜுடன் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
விஜய் நடிக்கும் கடைசிப் படமாக இந்தப் படம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தாங்கள் ரசித்த விஜய் படங்களை ஒவ்வொன்றாக நினைவு கூறும் ரசிகர்கள், இனி முதல் நாள் முதல் ஷோ பார்க்க பணம் சேர்த்துவைக்கும் தேவை இருக்காது, எந்த திரையரங்கத்திலும் சென்று டிக்கெட்டிற்காக மணிக்கணக்கில் காத்துக்கிடக்க முடியாது என்று தங்களது வருத்தங்களை சமூக வலைதளங்கள் முழுவதும் பதிவு செய்து வருகிறார்கள்.
கோட்
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்தில் சினேகா , பிரபுதேவா, பிரஷாந்த், பிரேம்ஜி, லைலா, மோகன், மீனாக்ஷி செளதரி, உள்ளிட்டவர்கள் நடிக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது.