பஹல்காம் தாக்குதல் - இந்தியா பாகிஸ்தான் மோதல் பஹல்காம் தாக்குதல்
கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி, ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர். இது, இந்தியா முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகள் இடையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதன் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாகக் கூறி இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அட்டாரி எல்லையை மூடியது. இந்தியாவுக்கு பயணம் செய்ய பாகிஸ்தானியர்களுக்கு தடை விதித்தது. குறிப்பாக, பாகிஸ்தான் உடன் போடப்பட்டிருந்த சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா தற்காலிகமாக ரத்து செய்தது. இப்படியான நிலையில் பாகிஸ்தான் குறித்தும் பஹல்காம் தாக்குதல் குறித்து நடிகர் விஜய் தேவரகொண்டா பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
சூர்யா முன் உளறிய விஜய் தேவரகொண்டா
கார்த்திக் சுப்பராஜ் இயக்கி சூர்யா நடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சி நேற்று ஏப்ரல் 26 ஆம் தேதி ஹைதராபாதில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர் விஜய் தேவரகொண்டா கலந்துகொண்டு பேசினார் " சூர்யா அண்ணா எனக்கு ரொம்ப பிடித்த நடிகர்களில் ஒருவர். அவருடைய நடிப்பை பார்த்து நான் மிரண்டு போயிருக்கிறேன். அவரைப் போன்ற படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய் ஆசை . அவர் நடித்த வாரணம் ஆயிரம் திரைப்படம் எனக்கு ரொம்ப பிடித்த படம். ரெட்ரோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும் என நான் வாழ்த்துகிறேன்" என்று பேசிய விஜய் தேவரகொண்டா தொடர்ந்து பஹல்காம் தாக்குதல் குறித்து பேசினார். " இந்த தீவிரவாதிகள் மூளை இல்லாதவர்கள். இவர்களுக்கு படிப்பு சொல்லிக் குடுக்க வேண்டும். பாகிஸ்தானில் அடிப்படை கட்டமைப்புகள் கூட இல்லை. தங்கள் நாட்டிற்குள் நடக்கும் பிரச்சனைகளையே அவர்களால் சரிசெய்ய முடியவில்லை ஆனால் காஷ்மீருக்காக இந்தியாவை தாக்குகிறார்கள். காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமானது. காஷ்மீர் மக்கள் இந்தியாவில் முக்கிய அங்கத்தினர். இந்தியா பாகிஸ்தானுடன் போரிட தேவையில்லை. பாகிஸ்தானியர்கள் அவர்களின் புரட்சி அமைப்பு மற்றும் அரசால் சீக்கிரம் சலித்துவிடுவார்கள். " என விஜய் தேவரகொண்டா பேசியுள்ள கருத்து பலரது விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
பல ஆண்டுகளாக நடந்து வரும் காஷ்மீர் பிரச்சனையில் அடிப்படை தெரியாமல் மேடையில் சூர்யாவை வைத்துக் கொண்டு இவர் என்ன உளறிக் கொண்டிருக்கிறார் என ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகிறார்கள்.