தமிழக முதலமைச்சர் விஜயின் கல்லூரி வாழ்க்கையில் நடந்த பரபரப்பான சம்பவம் ஒன்றை அவரது நெருங்கிய நண்பரும் நடிகருமான சஞ்சீவ் பகிர்ந்துள்ளார். சுற்றுலாவுக்காக ரயிலில் சென்றபோது ஏற்பட்ட மோதல் குறித்து அவர் கூறிய தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Continues below advertisement

சினிமாவில் நடிகராக இருந்து தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வந்தாலும் ரசிகர்களுக்கு அவர் இன்றும் ஹீரோவாகதான் தென்படுகிறார். நடை , உடை என ஒவ்வொரு நாளும் முதல்வர் விஜயின் சின்ன சின்ன அசைவுகளையும் அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளத்தில் சிலாகித்து பேசி வருகிறார்கள். திரையில் மட்டுமில்லாமல் நிஜ வாழ்க்கையிலும் விஜய் மாஸான ஒரு நபர் என்பதற்கு உதாரணமாக தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார் விஜயின் நெருங்கிய நண்பர் சஞ்சீவ்

சுற்றுலா சென்றபோது ஏற்பட்ட தகராறு

இதுகுறித்து பேசிய சஞ்சீவ், "லயோலா கல்லூரியில் படித்தபோது நண்பர்கள் குழுவுடன் வடஇந்தியாவுக்கு சுற்றுலா சென்றிருந்தோம். ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, முந்தைய ரயில் நிலையத்தில் எங்கள் கல்லூரியைச் சேர்ந்த ஒரு மாணவருக்கும் வேறு சிலருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. அந்த மாணவர் அடுத்த நிலையத்தில் தனது நண்பர்களை வரவழைத்ததால், சுமார் 60 முதல் 70 பேர் உருட்டுக்கட்டைகளுடன் எங்கள் பெட்டியை நோக்கி வந்தனர்.

Continues below advertisement

மாஸ் காட்டிய விஜய்

அப்போது ரயிலில் நாங்கள் மட்டுமல்ல, எங்களுடன் படித்த மாணவிகளும் இருந்தனர். 17, 18 வயதில் என்ன நடக்கிறது என்பதே எங்களுக்கு புரியவில்லை. திடீரென அந்த கும்பல் எங்கள் பெட்டிக்குள் நுழைய முயன்றது. அந்த நேரத்தில் விஜய் இரண்டு மேல் படுக்கைகளுக்கு நடுவே நின்றபடி எதிரே வந்த ஒருவரை காலால் எட்டி உதைத்தார். அவர் கீழே விழுந்த அந்த சில நொடிகளை பயன்படுத்தி, அங்கிருந்த மாணவிகளை பாதுகாப்பாக அழைத்துக்கொண்டு நாங்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேறினோம்.

விஜய் யாரையும் தாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அப்படி செய்யவில்லை. எங்களை காப்பாற்றிக் கொள்வதற்கும், குறிப்பாக பெண்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கும்தான் அந்த முடிவை எடுத்தார். அதன் பிறகு ரயில் நிலைய போலீசார் வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். நாங்கள் சில நிமிடங்கள் காணாமல் போனதால், எங்கள் நண்பர்கள் அனைவரும் மிகவும் பதற்றமடைந்தனர். பின்னர் நாங்கள் பாதுகாப்பாக திரும்பி வந்த பிறகுதான் அனைவருக்கும் நிம்மதி ஏற்பட்டது" என்று தெரிவித்துள்ளார்.