சமீப காலமாக பிரபலங்கள் மிகுதியான ஆர்வத்தில் ஏதாவது சொல்ல போக அதனால் பெரும் சர்ச்சையில் சிக்கி தவிக்கிறார்கள். 


தமிழ் திரையுலகின் மோஸ்ட் ஃபேவரட் நடிகையாக வலம் வருபவர்  நடிகை சமந்தா. சமீபத்தில் தான் வைரஸ் தொற்றுகளுக்கு பாரம்பரிய மருந்துகளுக்கு மாற்று சிகிச்சையாக ஹைட்ரஜன் பெராக்சைடு நெபுலைசேஷன் சிகிச்சையை முயற்சிக்குமாறு தன்னுடைய ஃபாலோவர்களை இன்ஸ்டாகிராம் மூலம் ஊக்குவித்தார். எந்த ஆதாரமும் இன்றி இது போன்ற மருத்துவ சிகிச்சைகளை மக்களுக்கு பரப்ப கூடாது என சில மருத்துவர்கள் சமந்தாவுக்கு எதிராக கிளம்பினார். அதனால் ஏராளமான சர்ச்சைகளில் சிக்கி கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார். 


 



 


அதே பாணியில் தற்போது மற்றுமொரு பிரபலமான இசையமைப்பாளர், இயக்குநர், நடிகர் என பன்முக திறமையலாக விளங்கும் விஜய் ஆண்டனியும் சிக்கியுள்ளார். ரோமியோ படத்தின் ப்ரோமோஷனுக்கு அவர் வருகை தந்த போது காலில் செருப்பு இன்றி வெறும் காலோடு வந்திருந்தார். இது குறித்து கேட்ட போது "காலில் செருப்பு இல்லாமல் நடந்து பாருங்கள் அதன் அருமை உங்களுக்கு புரியும். சீரியஸா சொல்றேன், 1 மாதம் செருப்பு போடாமல் நடந்து பாருங்க. அதோட பயன் உங்களுக்கு தெரியும், செமையா இருக்கும்" என பேசி இருந்தார். 


விஜய் ஆண்டனியின் இந்த கருத்துக்கு மூளை மற்றும் முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பரூக் அப்துல்லா எதிர் கருத்தை தன்னுடைய முகநூல் பக்கம் மூலம் போஸ்ட் ஒன்றை பகிர்ந்து இருந்தார். 


"கட்டுப்பாடற்ற நீரிழிவு நோயாளிகளுக்கு கால் புண்கள் எளிதில் ஆறுவதில்லை. எனவே நீரிழிவு நோயாளிகள் கட்டாயம் செருப்பின்றி வெளியே நடக்க அனுமதிப்பதில்லை. செருப்பின்றி வெளியே நடப்பதால் கால் பாதம் வழியாக நுண் புழுக்கள் உள் சென்று குடலில் வாழும். குடலில் இருந்து கொண்டு ரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும். இதன் விளைவாக ரத்த சோகை நோய் குணமாக வழியே இராது.


இன்னும் செருப்பின்றி வெளியே பணி புரிபவர்கள்/ நடப்பவர்களுக்கு காலில் முள் தைத்து / ஆணி தைத்து அதனால் பல சிக்கல்கள் உண்டாகின்றன. எனவே தயவு கூர்ந்து செருப்பு உள்ளிட்ட காலணிகளை அணிந்து வெளியே நடப்பது பல பிரச்சனைகளைத் தடுக்கும். பல நோய்களில் இருந்து காக்கும் நடவடிக்கையாகும்" என தெரிவித்துள்ளார். 


எனவே செருப்பு இன்றி நடப்பது என்பது அனைவருக்கும் பொருந்தாது. இதற்கு தகுந்த விழிப்புணர்வு தேவை என கூறி அவரின் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த ஒரு மூதாட்டி ஒருவருக்கு நடந்த அனுபவம் குறித்து பகிர்ந்து இருந்தார். இந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.