விஜய் ஆண்டனி நடித்துள்ள கொலை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இன்பினிட்டி பிலிம் வெஞ்சர்ஸ், லோட்டஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள படம் ‘கொலை’. இந்த படத்தின் விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும் ராதிகா சரத்குமார், முரளி சர்மா, சித்தார்த்தா சங்கர், கிஷோர் குமார், ஜான் விஜய் ஆகியோரும் கொலை படத்தில் இணைந்துள்ளனர். சிவக்குமார் விஜயன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இதனிடையே கடந்த ஆண்டு கொலை படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. ஹாலிவுட் தரத்திலான மேக்கிங், வசனங்கள் என அனைத்தும் இணையத்தில் பேசுபொருளாக மாறியது. க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள கொலை படம் நீண்ட நாட்களாகவே ரிலீசாகாமல் இருந்தது.
இதனால் விஜய் ஆண்டனி ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் ஒரு வழியாக கொலை படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் ஜூலை 21 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
முன்னேற்ற பாதையில் விஜய் ஆண்டனி
சின்னத்திரையில் பல சீரியல்களுக்கு இசையமைத்து வந்த விஜய் ஆண்டனி, சுக்ரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். துள்ளலான இசை, ரசிக்க வைக்கும் பாடல் உருவாக்கம் என ரசிகர்களுக்கு தனியாகவே தெரிந்தார். பின்னர் 2012 ஆம் ஆண்டு நான் படத்தின் மூலம் ஹீரோவாகவும், தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைத்தார். தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்த அவர் கடந்த மே மாதம் வெளியான பிச்சைக்காரன் 2 படய்த்தின் மூலம் இயக்குநராகவும் களம் கண்டார். என்பது குறிப்பிடத்தக்கது.