ஒரு இசையமைப்பாளராக என்ட்ரி கொடுத்து பின்னர் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் என பன்முகத் திறமையாளராக இருப்பினும் மிகவும் எளிமையானவராக ரசிகர்களின் இதயங்களை வென்றவர் விஜய் ஆண்டனி.


பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பு சமயத்தில் ஏற்பட்ட கோரமான விபத்தால் தீவிர சிகிச்சைக்குப் பிறகு மீண்டு வந்த விஜய் ஆண்டனிக்கு, மீண்டும் ஒரு துயரமான ஒரு சம்பவமாக அமைந்தது அவரின் மூத்த மகள் மீராவின் தற்கொலை. தொடர்ந்து விஜய் ஆண்டனி வாழ்க்கையில் ஏற்படும் சோகம் திரையுலகத்தினர் மற்றும் அவரின் ரசிகர்களையும் ஆழமாக பாதித்துள்ளது.


இந்நிலையில் மகள் இறப்புக்குப் பிறகு முதன்முறையாக ரத்தம் படத்தின் ப்ரொமோஷன் பணிகளுக்காக விஜய் ஆண்டனி நேற்று மீடியாக்களை சந்தித்தார்.


சி.எஸ். அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ரத்தம்'. அக்டோபர் 6ஆம் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இப்படம்ம் ஆக்ஷன் கலந்த திரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. 


'இந்நிலையில் ரத்தம் படத்தின் நேர்காணலில் விஜய் ஆண்டனி மிகவும் வெளிப்படையாக சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். 


 



 


“சிறிய வயதில் இருந்தே பல விஷயங்களை சந்தித்ததாலோ என்னவோ,  நான் மற்றவர்களை சந்தோஷப்படுத்தி பார்க்க வேண்டும் என ஆசைப்படுகிறேன் என நினைக்கிறன். எல்லாமே நமக்குள் தான் இருக்கிறது. நான் யாரையும் ஊக்கப்படுத்தும் விதமாக பேச வேண்டும் என யோசித்து எல்லாம் பேசுவதில்லை. போகிற போக்கில் சில விஷயங்களை நான் சொல்கிறேன் அது மக்களுடன் கனெக்ட்டாகிறது என நினைக்கிறன். 


நம்முடைய ரோல் மாடல் என யாரும் இல்லை, யாரையும் தேடிப்போக வேண்டிய அவசியமுமில்லை. நாமே நம்மை ரோல் மாடலாக எடுத்து கொள்ள வேண்டும். வாழ்க்கையில நிறைய அடிவாங்கினாதால அப்படி ஆகிவிட்டன என தெரியவில்லை.


நிறைய தடவை அடிபட்டதால் என்னவோ மறத்துவிட்டது. அது மற்றவர்களுக்கும் நடக்க கூடாது என்ற அக்கறை உள்ளது. ஒரு அப்பாவாக குழந்தைகளை இப்படி பார்த்து கொள்ள வேண்டும் என்ற அனுபவம் இருக்கும் இல்லையா... நம்ம பட்ட அடியால் மற்றவர்களை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் வருமல்லவா... அது போல தான், நான் வாழ்க்கையில் நிறைய அனுபவங்களை பல ஆங்கிளில் இருந்து பார்த்ததாலோ என்னோவோ, சில விஷயங்களை சொல்லிவிடுகிறேன். அதில் ஒரு சில கிளிப்பிங் வைரலாகி விட்டது. 


நம்முடைய லைஃப்ல நடந்த விஷயங்களை மறக்க வேண்டும் என எந்த அவசியமும் இல்லை. எதற்காக மறக்கணும்? மறக்கவும் முயற்சிக்க வேண்டாம்.. சில விஷயங்கள் நினைவலைகளாக வந்து போனால் அதை நினைத்துப் பார்க்கலாம் அதில் ஒன்னும் தப்பு கிடையாது. ஞாபகங்கள் தான் ஒரு மனிதனின் வாழ்க்கையே.


அதை மறந்துவிட்டால் வாழ்வதற்கு எந்த அர்த்தமும் இல்லை. அதனால் நான் எதையும் மறக்க முயற்சித்தது இல்லை. வலியாக இருந்தாலும் அந்த வலியோடு வாழனும் என ஆசைப்படுவேன். அதே போல தான் சந்தோஷமாக இருந்தாலும் அதை நினைத்து வாழ நினைப்பேன். வாழ்க்கையின் எல்லா மொமெண்ட்டிலும் ஏதோ ஒரு வகையான எமோஷன் இருக்கு. உட்கார்ந்து யோசிக்கவும் ஆசைப்படுவேன். ஆனால் வேலை பளு காரணமாக அதை செய்ய முடியவில்லை” எனப் பேசியுள்ளார்.