இசையமைப்பாளராக இருந்து பின்னர் நடிகராக என்ட்ரி கொடுத்த விஜய் ஆண்டனி பல வித்தியாசமான படங்களில் நடித்து தன்னை ஒரு சிறந்த நடிகராகவும் நிரூபித்து காட்டியவர். 2016-ஆம் ஆண்டு அவர் நடித்த பிச்சைக்காரன் திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்து நல்ல மார்க்கெட்டை பெற்று தந்தது. அந்த வகையில் சமீபத்தில் விஜய் ஆண்டனி ஒரு இயக்குநராக அவதாரம் எடுத்த பிச்சைக்காரன் 2 படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி படமாக அமைந்தது.
மிகவும் வரவேற்கத்தக்க ஒரு படமாக அமைந்த பிச்சைக்காரன் 2 படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் விஜய் ஆண்டனி மிகப்பெரிய விபத்தில் சிக்கி பலத்த காயங்கள் ஏற்பட்டு அறுவை சிகிச்சைகள் மேற்கொண்ட பிறகு தான் சகஜ நிலைக்கு திரும்பினார். சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் விஜய் ஆண்டனி தனக்கு நேர்ந்த விபத்து குறித்தும் அவரின் தற்போதைய மனநிலை குறித்தும் பேசியிருந்தார்.
மலேசியாவில் லங்காவி என்ற ஊரில் இருக்கும் பெரிய கடலில் நானும் ஹீரோயினும் போட்டில் டிராவல் செய்வது போன்ற ஒரு காட்சியமைப்பு. மற்றொரு போட்டில் இருந்து எங்களை படம்பிடித்து கொண்டு இருக்கிறார்கள். மிகவும் வேகமாக நான் போட்டை ஓட்டிக்கொண்டு செல்லும்போது அப்படி நடந்தது. விஷுவல் நன்றாக அமைய வேண்டும் என்பதற்காக படம் பிடிக்கும் போட்டை ஒட்டி சென்றேன். முதல் முறை நன்றாக வந்தது. இரண்டாவது முறை இன்னும் பெட்டராக காட்சி அமைய வேண்டும் என்பதற்காக அந்த போட்டுக்கு அருகில் சென்றேன். அப்போது என்ன நடந்தது என்பது எனக்கு சரியாக தெரியவில்லை. அலை வேகமாக வந்ததால் போட் தூக்கிடுச்சா? இல்ல என்ன ஆச்சு? என்று தெரியவில்லை. எனக்கு கண்ட்ரோல் மிஸ் ஆகி போட்ல போய் மோதிட்டேன். மூக்கில் அடிபட்டு முகதாடை கிழிந்து தொங்கிடுச்சு. அப்படியே நினைவில்லாமல் கடலில் விழுந்து விட்டேன். சுயநினைவு இல்லாததால் தானாகவே உடல் மேலே வந்துள்ளது.
உதவி இயக்குநர், ஹீரோயின் அனைவரும் என்னை அப்படியே மேலே இழுத்து போட்டு காப்பாத்துனாங்க. ஒரு நாள் கழித்த பிறகு தான் கண் முழிச்சு பார்த்தேன். கண்ணில் ஒரு பக்கம் ஸ்கிராட்ச் ஆயிடுச்சு. எனக்கு ஒன்னுமே புரியல. என்னை சுத்தி எல்லாரும் பயந்து போய் நின்னுட்டு இருந்தாங்க. ரொம்ப சாதாரணமா எல்லாம் ஓகே. ஏன் எல்லாரும் கவலைப்படறீங்க? ஆக்சிடென்ட்னா அப்படிதான் என்றேன். ஏதோ சின்ன அடின்னு நினைச்சுட்டேன். கண்ணாடிய பார்த்த பின்புதான் என்ன நடந்தது என்பது எனக்கு தெரியவந்தது.
முகத்தில் நிறைய அடி, சில இடங்களில் உள்ளே போய் இருக்கும். இப்போ கூட பேசும்போது சில டிஸ்கம்பர்ட் இருக்கு. முகத்திலே 8 -9 ப்ளேட் வைச்சு இருக்காங்க. ஆனா அதனால ஒன்னும் இல்ல மனசு ரொம்ப நல்லா இருக்கு.
உண்மையிலேயே விபத்துக்கு பிறகு நான் நினைக்குறது, நடந்துக்குறது எல்லாத்துலேயும் நிறைய பாசிட்டிவிட்டி தெரியுது. இது ஒன்னும் இல்லை உடம்பு தானே, பிரச்சனை கிடையாது பார்த்துக்கலாம். இன்னும் முழுசா என்னோட முகம் சரியாகவில்லை. டிரீட்மெண்ட் போயிட்டுதான் இருக்கேன். அதனால ஒரே வாழ்க்கையிலே மூணு விதமான ஒரு மனிதனா வாழப்போகிறேன் என்பதை மிகவும் பாசிட்டிவாகத்தான் எடுத்துக்குறேன் என்றார் விஜய் ஆண்டனி.
என் மனைவியால்தான், எனக்கு நடந்த அந்த விபத்தில் இருந்து இன்னும் முழுமையாக வெளியே வரமுடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக இப்போதுதான் மீண்டு வந்துள்ளார் என தெரிவித்தார் விஜய் ஆண்டனி.